மழையுடன் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணிப்புரை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மழையுடன் கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மே 26 முதல் ஜூன் முதலாம் திகதி வரை டெங்கு ஒழிப்பு வாரத்தில் கல்வி அமைச்சின் ஊடாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை தெளிவுபடுத்தும் வகையில் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தை மேற்கொள்ளுமாறும் அவர் ஆலோசனை வழங்கினார்.

மேலும், அரச நிறுவனங்கள், மத ஸ்தலங்கள், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்கள் போன்றவற்றில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய சாகல ரத்நாயக்க, இந்த நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் தற்போதைய நிலை குறித்த முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் சாகல ரத்நாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானி சவேந்திர சில்வா ஆகியோர் தலைமையில் இதற்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது மற்றும் தற்போதைய முன்னேற்றம் குறித்து இங்கு மீளாய்வு செய்யப்பட்டது.

குறிப்பாக மேல் மாகாணத்தில் டெங்கு பரவல் அதிகரிப்பதைக் காட்டும் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை மையப்படுத்தி டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்த கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதில் சாகல ரத்நாயக்க வழங்கிய தலைமைத்துவத்தை பாராட்டிய சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால, இந்த வேலைத்திட்டத்திற்கு சுகாதார அமைச்சு முழு ஒத்துழைப்பையும் வழங்கும் எனவும் தெரிவித்தார்.

இது தவிர கொழும்பு நகரில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலிருக்கும் மரங்களை முழுமையாக அகற்றுவது அல்லது அபாயத்தைக் குறைப்பதற்காக கிளைகளை வெட்டுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. எவ்வாறாயினும், வெட்டப்படும் மரங்களுக்குப் பதிலாக மரம் நடும் வேலைத்திட்டத்தை தயாரித்து அதன் முன்னேற்றம் குறித்து தெரிவிக்குமாறும் சாகல ரத்நாயக்க ஆலோசனை வழங்கினார்.

மேலும், தூய்மையான மற்றும் கவர்ச்சிகரமான கரையோரத்தை பராமரிப்பதுடன் கழிவு நீரை கடலில் விடுவதற்கு மிகவும் பொருத்தமான வழிமுறையை தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடல் சாகல ரத்நாயக்க தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்தாலோசித்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக செயலணியொன்றை நியமிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் அமைச்சுகளின் அதிகாரிகள், பாதுகாப்புத் திணைக்களத் தலைவர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects