தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள திரிபோஷா உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதி வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, குறிப்பிட்ட காலப்பகுதிக்கு, நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்ட போஷாக்கு தேவைகளையுடைய குழந்தைகளுக்கு வழங்குவதற்கு நிபந்தனைகளுடன் திரிபோஷ உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அஃப்ளாடாக்சின் அதிகளவில் உள்ளதால், 6 மாதம் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோசா உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
எனினும், ஊட்டச்சத்து தேவையுள்ள குழந்தைகளுக்கு இந்த திரிபோசாக்களை வழங்குவது அவசியம் என்பதால், 6 மாதம் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோசா உணவில் அஃப்லாடாக்சின் மதிப்பை குறித்த மட்டத்தில் பேண வேண்டும் என்ற நிபந்தனையுடன் சுகாதார அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை, திரிபோஷாவிற்கு பதிலாக அரிசியிலிருந்து மற்றுமொரு போஷாக்கான உணவை உற்பத்தி செய்வதற்கு தமது நிறுவனம் தயாராகவுள்ளதாக லங்கா திரிபோஷ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் உற்பத்திக்காக அரைக்கும் இயந்திரம் தேவைப்படுவதாகவும், அதற்கு சுமார் 400 மில்லியன் ரூபா செலவாகும் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதில் பாதி தொகையை இந்நாட்டு அரசாங்கம் வழங்கினால் மீதித் தொகையை உலக உணவுத் திட்டத்தின் ஊடாக வழங்கத் தயார் என சிலோன் திரிபோஷ நிறுவனத்தின் அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇