ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலைய (JICA) தொண்டர் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் , வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்ஸுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலையத்தின் தொண்டர்களை வரவழைத்து முன்னெடுக்கவுள்ள திட்டங்களை ஆளுநருக்கு தெளிவுப்படுத்தும் வகையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.பிரணவநாதனும் இக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
பாரிய அழிவிலிருந்து ஜப்பான் மீண்டெழுந்து வர காரணமாகிய அறிவு , வடக்கின் மீள் எழுச்சி திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார். தொழில்நுட்ப அறிவு , திறன் அபிவிருத்தி, மனிதவள முகாமைத்துவம் உள்ளிட்ட விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநர் கூறினார். விவசாயம், கல்வி, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, நிதி முகாமைத்துவம், ஊட்டச்சத்து திட்டங்கள், விசேட தேவையுடையோருக்கான கல்வி உள்ளிட்ட விடயங்களில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
இவ்வாறன திட்டங்களை செயற்படுத்துவதற்கு தமது அமைப்பு தயாராக உள்ளதென தெரிவித்த JICA அமைப்பின் பிரதிநிதிகள், அவற்றிற்கு ஆளுநரின் பூரணமான ஒத்துழைப்பு அவசியம் தேவைப்படுவதாக கூறினர்.
திண்ம கழிவு முகாமைத்துவம், பிளாஸ்டிக் அற்ற சூழலை உருவாக்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளையும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதற்காக ஜப்பான் நாட்டிலிருந்து துறைசார் அனுபவமிக்க தொண்டர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் இலங்கைக்கு வரவழைக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇