பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா மெய்வல்லநர் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு இலங்கை வீராங்கனைகள் தருஷி கருணாரட்னவும் டில்ஹானி லேக்கம்கேயும் தகுதிபெற்றுள்ளனர்.
உலக மெய்வல்லுநர் தரவரிசைகளின் அடிப்படையில் இவ்விருவரும் தகுதிபெற்றுள்ளதாக வேர்ல்ட் அத்லெட்டிக்ஸின் உத்தியோகபூர்வமாக இணையத்தளத்தில் அறிவிக்கப்பட்டது.
பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டிகக்கான ‘பாரிஸ் நோக்கிய பாதை’ (Road to Paris) உலக தரவரிசையில் தருஷி கருணாரட்ன 45ஆவது இடத்தை அடைந்ததன் மூலம் அவர் ஒலிம்பிக்கில் பங்குபற்ற தகுதிபெற்றார்.
இதேவேளை, பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டிக்கான ‘பாரிஸ் நோக்கிய பாதை’ தரவரிசையில் 26ஆவது இடத்தைப் பெற்றதன் மூலம் டில்ஹானி லேக்கம்கே ஒலிம்பிக் செல்ல தகுதிபெற்றுள்ளார்.
இதேவேளை, ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வைல்ட் கார்ட் முறையில் யுப்புன் அபேகோன், யோதசிங்க ஆகிய இருவரில் ஒருவருக்கு ஒலிம்பிக் செல்ல வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அது தொடர்பான இறுதி முடிவு ஜூலை 7ஆம் திகதியே கிடைக்கும் என ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸ் தெரிவித்தது.
அத்துடன் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பெரும்பாலும் அருண தர்ஷனவுக்கு ஒலிம்பிக்கில் பங்குபற்ற வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தற்போது ‘பாரிஸ் நோக்கிய பாதை’ தரவரிசையில் 51ஆவது இடத்தில் இருக்கிறார்.
அவருக்கு ஒலிம்பிக் செல்ல கிடைக்குமா இல்லையா என்பது வியாழக்கிழமை மாலை தெரியவரும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇