வஸ்கடுவ, சைட்ரஸ் ஹோட்டல் மண்டபத்தில் நடைபெற்ற மேற்கு ஆசிய இளையோர் விரைவு (Rapid) செஸ் போட்டியில் இலங்கை 2 தங்கப் பதக்கங்கள் உட்பட 8 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த நிலையில் 3ஆம் இடத்தைப் பெற்றது.
10 வயதுக்குட்பட்ட பகிரங்க பிரிவில் சமுதித்த சசேன் பண்டார ஹேரத், 14 வயதுக்குட்பட்ட பகிரங்க பிரிவில் திசரிந்து இந்துவர ஆகிய இருவரும் தங்கப் பதக்கங்களை சுவீகரித்தனர். அவர்கள் இருவரும் தத்தமது பிரிவுகளில் வழங்கப்பட்ட 7 மொத்த புள்ளிகளில் தலா 5.5 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கங்களை வென்றெடுத்தனர்.
இலங்கைக்கு 2 தங்கப் பதக்கங்களை விட 3 வெள்ளிப் பதக்கங்கள், 3 வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன.
எட்டு வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான விரைவு செஸ் போட்டியில் எலீஷா வர்ணகுலசூரிய பெர்னாண்டோ வெள்ளிப் பதக்கத்தையும் ரி.ஐ.பண்டார வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
எட்டு வயதுக்குட்பட்ட பகிரங்க பிரிவில் துலெய்ன் தேனுல அம்பகஹாவத்த, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பிரிவில் செதும்லீ தேவ்ஹரா பல்லியகே ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பிரிவில் ரிசாலி லோஹன்சா ஜயவீர, 10 வயதுக்குட்பட்ட பகிரங்க பிரிவில் செனித்த செஹாஸ் தின்சர கருணாசேன ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
இப் போட்டியில் கஸக்ஸ்தான் 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களுடன் முதலாம் இடத்தைப் பெற்றது.
இந்தியா 3 தங்கம், 6 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தைப் பெற்றது.
ஈரான் 2 தங்கப் பதக்கங்களுடன் 4ஆம் இடத்தைப் பெற்றது.
7 சுற்றுகளைக் கொண்ட இப் போட்டியில் கஸக்ஸ்தான், இந்தியா, இலங்கை, ஈரான், பங்களாதேஷ், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உட்பட 11 நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பங்குபற்றினர்.
தற்போது வேகமான நேரக் கட்டுப்பாடு (Blitz) செஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇