கோஸ்டோகாண்ட்ரிடிஸ் எனும் மார்பக விலா குருத்தெலும்பு வீக்கப் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை…..
எம்மில் சிலருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்படக்கூடும். உடனடியாக பாதிக்கப்பட்டவரை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கும் போது வைத்தியர்கள் பரிசோதித்து கோஸ்டோகான்ட்ரிடிஸ் எனும் மார்பகப் பகுதியில் உள்ள எலும்புகளை இணைக்கும் குருத்தெலும்புகளில் வீக்கப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என விளக்கம் தருவார்கள்.
இதற்கு மருத்துவ மொழியில் கோஸ்டோகான்ட்ரிடிஸ் என குறிப்பிடுவர். பெரும்பாலும் நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களை விட, பெண்கள் அதிக அளவில் இத்தகைய பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள. இதற்குரிய முழுமையான விழிப்புணர்வு மக்களிடத்தில் ஏற்படவில்லை எனவும் வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
இத்தகைய பாதிப்பு பொதுவாக ஒரு நோயாளியின் உடலின் இடது புற மேல் பகுதியில் அமைந்திருக்கும் விலா எலும்புகளில் பாதிப்பை உண்டாக்குகிறது. இதன் போது வலி திடீரென்று ஏற்படக் கூடியதாகவும், கூர்மையானதாகவும், மோசமானதாகவும் இருக்கும். விலா எலும்புடன் இணைக்கப்பட்டிருக்கும் குருத்தெலும்பு பகுதிகளில் இது ஏற்படுகிறது.
இதற்கான காரணம் துல்லியமாக கண்டறியப்படவில்லை என்றாலும், சுவாசிக்கும் போதும் இருமல், தும்மல் அல்லது மார்பு சுவரின் இயல்பான அசைவை விட அசாதாரணமான அசைவின் போதும் மோசமடைகிறது. சிலருக்கு திடீரென்று ஏற்படும் அதிர்ச்சி, நோய், நாட்பட்ட இருமல், மன உளைச்சல் போன்ற காரணங்களாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
பொதுவாக இவை உங்களது இடதுபுறத்தில் உள்ள மார்பகத்தின் விலாப் பகுதியின் மேல் பகுதியில் வலியை உண்டாக்கி, அது தோள்பட்டை வரை பரவச் செய்கிறது. கிட்டத்தட்ட மாரடைப்புக்கான அறிகுறியை இத்தகைய பாதிப்பும் கொண்டிருக்கிறது. மார்பக எலும்பு பகுதியில் அடிக்கடி வலி ஏற்படுவது அந்த வலி கூர்மையானதாகவும், தாங்க இயலாததாகவும் உணர்வது இவை இதன் அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம்.
இத்தகைய அறிகுறிகள் இருந்தால் மருத்துவர்கள் எக்ஸ்ரே மற்றும் எலக்ட்ரோ கார்டியோ கிராம் பரிசோதனையை மேற்கொள்ள பரிந்துரைப்பர். பரிசோதனை முடிவுகளில் அடிப்படையில் நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்ட ஸ்டெராய்டு அற்ற பிரத்தியேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முதன்மையான நிவாரணம் வழங்கப்படுகிறது. வேறு சிலருக்கு பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகளுடன் இயன் முறை பயிற்சியையும் நிவாரணத்திற்காக இணைத்து வழங்குவர். வெகு சிலருக்கு மட்டுமே குறிப்பிட்ட பகுதியில் நரம்பு தூண்டல் எனும் சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் தருவர். இதன் பிறகும் விலா எலும்பு பகுதியில் குறுத்தெழும்பின் வீக்கம் குறையவில்லை என்றால் வலி மிகுந்த இடத்தில் வேறு சில பரிசோதனைகளை மேற்கொண்டு பிரத்யேக ஊசியை செலுத்துவதன் மூலமாக சிகிச்சையை அளித்து நிவாரணம் வழங்குவர்.
வைத்தியர் துர்கா தேவி
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇