அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவாகியுள்ளார்.
சர்வதேசத்தின் சக்தி மிகுந்த நாடான அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹரிஸும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிட்டனர்.
தொடக்கம் முதலே இருவரும் கடுமையான பிரசார யுக்திகளை கையாண்டனா்.அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் கமலா ஹரிஸுக்கு ஆதரவாக இருந்தது. இதனால் டிரம்ப் தனது பிரச்சார முறையை மாற்றினார். டிரம்ப்பிற்கு ஆதரவாக உலக பணக்காரரான எலான் மஸ்க் களம் இறங்கி கடுமையாக பிரசாரம் செய்தார். இருவருக்கும் இடையே கடுமையான பிரசார போட்டி நிலவியது.
இதற்கு இடையே நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தார்.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் இறுதியான நிலையில், டொனால்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றுள்ளார். தனது போட்டியாளர் கமலா ஹரிஸை விட அதிக வாக்குகள் பெற்று டொனால்ட் டிரம்ப் 2 வது முறையாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇