பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று (24.12.2024) முதல் விசேட பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதன்படி சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்காக மேலதிகமாக 50 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹங்ச தெரிவித்துள்ளார்.
இதற்காகப் பேருந்து சாலைகள் தயாராகவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட புகையிரதங்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
புகையிரதத் திணைக்களத்தின் பிரதிப்பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே இதனைத் தெரிவித்துள்ளார்
இதேவேளை, பண்டிகை காலத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் 23.12.2024 அன்று முதல் பயணிகள் பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்களை சோதனைக்குப்படுத்தும் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அண்மைய நாட்களில் பயணிகள் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களால் ஏற்படும் விபத்துகளைக் கருத்திற்கொண்டு இந்த விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பதில் காவல் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பிலும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந் நடவடிக்கையின் போது கவனக்குறைவாக வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் 119 மற்றும் 1997 ஆகிய துரித இலக்கங்களுக்கு தகவல் வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










