முதன் முதலாக உள்ளூராட்சிமன்றம் ஒன்று சுயமாக ஆதன மதிப்பீட்டை நிறைவேற்றி ஆதனவரி அறவிடும் நிகழ்வு!

Tamil
 – 
ta

வரியிறுப்பாளர்கள் உள்ளூராட்சிமன்றங்களில் நம்பிக்கை வைக்கும்போதுதான் அவர்கள் தாமாகவே முன்வந்து வரியைச்செலுத்துவார்கள். வரியிறுப்பாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையில் உள்ளூராட்சிமன்றங்களின் சேவைகள் அமையவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

முதன் முதலாக உள்ளூராட்சிமன்றம் ஒன்று சுயமாக ஆதன மதிப்பீட்டை நிறைவேற்றி ஆதனவரி அறவிடும் நிகழ்வு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை – கரவெட்டியின், வட்டாரம் -1 கம்பர்மலையில் இடம்பெற்றது.

கரவெட்டி பிரதேச சபையின் செயலர் க.கம்சநாதன் தனது தலைமையுரையில், வடக்கில் பரீட்சார்த்தமாக தமது பிரதேச சபை பிரிவில் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி வரியிறுப்பாளர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் சிறந்த பலனைத் தந்துள்ளதாகக் குறிப்பிட்டார். மிகக் குறைந்தளவான தொகையே வரியாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இந்த வரி எதிர்காலத்தில் அந்த வரியிறுப்பாளர்களுக்கான சேவையாக மாறும் என்றும் தெரிவித்தார்.

பிரதம செயலர் இ.இளங்கோவன் தனது சிறப்பு விருந்தினர் உரையில், வரி மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படாமையால் உள்ளூராட்சிமன்றங்களுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டினார்.

வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலர் செ.பிரணவநாதன் தனது உரையில், மத்திய அரசாங்கத்தின் நிதியை எதிர்பார்க்காமல் இந்த வரி அறவீட்டின் மூலமாக பெறப்படும் நிதியில் உங்கள் பிரதேசத்துக்கான சேவைகளை வழங்க முடியும் எனக் குறிப்பிட்டார். அத்துடன் உங்களிடமிருந்து பெறப்படும் வரி, அதில் இந்தப் பிரதேசத்தில் செய்யப்படும் சேவை என்பன கரவெட்டி பிரதேச சபையின் இணையத்தளத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பொ.சிறீவர்ணன் தனதுரையில், உள்ளூராட்சி மன்றத்தில் உள்ள சட்ட ஏற்பாட்டுக்கு அமைவாக முதன்முதலாக உள்ளூராட்சி உதவி ஆணையாளரால் நியமிக்கப்படும் ஒருவர் மூலமாக நாம் வரி மீளாய்வை மேற்கொண்டிருக்கின்றோம் என்று குறிப்பிட்டதுடன் அது இலங்கையில் முதன் முதலாக இங்குதான் நடந்தேறியிருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டினார். மேலும் உள்ளூராட்சிமன்றங்களின் அதிகாரங்களைப் பயன்படுத்தி நீதிமன்றத்தை நாடாமல், கரவெட்டி பிரதேச சபையின் செயலர் க.கம்சநாதன் சட்டவிரோத மதிலை இடித்து அகற்றி எடுத்த நடவடிக்கை மூலம் உள்ளூராட்சி மன்றங்களின் சட்டஏற்பாடுகள் தொடர்பில் மக்களுக்கு விழிப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில், உள்ளூராட்சி மன்றங்கள் சிறப்பான சேவையை வழங்குவதற்கு வருமானம் முக்கியம். அவ்வாறான வருமானமீட்டலுக்கு இவ்வாறான வரிகள் முக்கியமானவை. 1965ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தப் பிரதேசத்தில் ஆதன மீள்மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுவரி அறவீடு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதில் பங்காற்றிய உத்தியோகத்தர்களையும், வரியிறுப்பாளர்களையும் பாராட்டுகின்றேன். இதை முன்மாதிரியாகக் கொண்டு வடக்கிலுள்ள ஏனைய உள்ளூராட்சிமன்றங்களும் செயற்படவேண்டும், என்றார்.

கரவெட்டி பிரதேச சபையின் வட்டாரம் – 01 இனைச் சேர்;ந்த 25 வரியிறுப்பாளர்களின் வரியைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கான பற்றுசீட்டை வழங்கி இச் செயற்பாட்டை ஆளுநர் ஆரம்பித்து வைத்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects