டிஜிட்டல் பணப் பரிவர்தனை முறைகள் மூலம் ‘ஊழல்’ எனப்படும் புற்றுநோயை சமூகத்திலிருந்து ஒழிக்க முடியும் என்று தலைமை நீதிபதியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான முர்து பெர்னாண்டோ தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தை ‘GovPay’ டிஜிட்டல் கட்டண தளத்துடன் இணைப்பதற்காக இன்று நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட போதே தலைமை நீதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ், அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக ‘GovPay’ வசதி சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இது 16 பிரதான அரச நிறுவனங்களில் பொது சேவைகளை அணுகும்போது இணைய வழி ஊடாக பணம் செலுத்தும் முறைமையை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.
www.govpay.lk என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் இச் சேவையைப் பெற வாய்ப்பு உள்ளது.
அதன்படி, இந்த செயல்முறையின் மற்றுமொரு கட்டம் இன்று (15.05.2025) உயர் நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி ஜனாதிபதி சட்டத்தரணி முர்து பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் சட்ட வல்லுநர்கள், இலங்கை தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) மற்றும் Lanka Pay ஆகியவற்றின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
அதற்கமைய, உயர் நீதிமன்றத்தின் பல்வேறு சேவைகளுக்கு நேரடியாக பணம் செலுத்திவந்த நிலையில், இதனூடாக இனிவரும் காலங்களில் இணைவழி ஊடாக பணம் செலுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது.
வழக்கு தாக்கல் செய்வதற்கான கட்டணங்கள், சான்றளிக்கப்பட்ட நகல் கட்டணங்கள், இழப்பீடு, முறைப்பாட்டு தாக்கல் கட்டணம் மற்றும் பிரமாணப் பத்திரங்களுக்கான கட்டணங்கள் உள்ளிட்ட பல கட்டண பரிவர்த்தனைகளை இணைவழி ஊடாக செலுத்த உதவும்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










