உலக சுற்றாடல் தினம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு காற்றும் எம் சூழலின் மூச்சு இயற்கை அன்னை எமக்களித்த மிகப்பெரும் கொடைகளில் ஒன்று நாம் வாழும் இந்த சுற்றுச்சூழல். பூமியைச் சூழ்ந்து காணப்படும் அனைத்து வகையான வளங்களும் இச்சூழலுக்குள் அடுங்கும். தினசரி நாம் சுவாசிக்கும் தூயகாற்று, தினசரி அருந்தப் பயன்படுத்தும் நீர், நாம் வாழும் இப்பூமி, அதனுள் அடுங்கியிருக்கும் மிருகங்கள், பறவைகள், காடுகள், கடல்கள், ஆறுகள், மலைகள், காலநிலை எனப் பல்வேறு வகையான அம்சங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

ஒரு மனிதன் உயிர்வாழ அவனுக்கு அவசியமாகத் தேவையான உணவு, உடை, உறையுள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என எது தேவையோ அவையனைத்தையும் இந்தச் சுற்றுச்சூழலே எமக்கு கொடையாக வழங்குகின்றது. அதாவது ஒரு தனிமனிதனுக்கு தான் வாழும் உறைவிடம் வழங்குகின்ற பாதுகாப்பிற்கு மேலாக அவனுக்கு வேண்டிய அனைத்தையும் இந்த அன்னை வாரி வழங்குவதனால் நாம் எமது சூழலை எமது இல்லத்தின் ஒரு அங்கமாகக் கூடக்கருதலாம். அத்துடன் ஒரு ஆரோக்கியமான சூழல் இன்றி இப்பிரபஞ்சத்தில் எந்த உயிருள்ள உயிரற்ற வளங்களும் நிலைத்து நிற்க முடியாது.

இத்தகைய பாரிய கொடைகளை எமக்கு அள்ளித்தருகின்ற இயற்கை அன்னையின் கொடையான இந்த சூழல் நமக்கு ஏன் முக்கியமான காரணியாகக் காணப்படுகிறது? காரணம் மனிதர்களாகிய நாம் வாழ்வதற்குத்தேவையான அனைத்துமே இந்தச் சூழலில் இருந்தே பெற்றுக்கொள்கின்றோம்.

சுற்றுச் சூழல் எமது வாழ்வின் ஒரு பகுதி என்று கூறுவதைக்காட்டிலும் இது எமது வாழ்வின் மையம் அல்லது அடித்தளம் என்று கூறுவது மேலானது. ஏனெனில் நாம் வாழ்வதற்குத் தேவையான அனைத்து மூலங்களையும் எமக்குத்தருகின்றது. நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க, மரங்களானது காபனீரொட்சைட்டை உள்ளெடுத்து ஒக்சிசனை எமக்கு வழங்குகின்றன. ஈரநிலங்கள் மற்றும் காடுகள் என்பன நமக்குத் தேவையான ஈரப்பதன் மற்றும் சிறந்த ஆரோக்கியமான சூழலுக்கான அடிப்படையை வழங்குகின்றன. இதன் மூலம் எமது உடலுக்கும் மனதிற்கும் உற்சாகம் மற்றும் மகிழ்ச்சி கிடைக்க வழிசமைக்கிறது.

அது மட்டுமன்றி இயற்கை சமனிலைக்கும் பாரிய பங்களிக்கின்றது. உதாரணமாக தேனீக்களை எடுத்துக் கொண்டால் அவை மகரந்த சேர்க்கைக்கு உதவுகின்றன, காடுகளை எடுத்துக்கொண்டால் அவையும் சூழல் சமனிலைக்கு உதவுகின்றன அத்துடன் மழை பொழிவதற்கு ஏதுவான சுழற்சி வட்டத்தை ஒழுங்கு படுத்துவதன் மூலம் காலநிலையைக் கட்டுப்படுத்த பெரிதும் துணைபுரிகின்றன. அதுமட்டுமன்றி கடல்களை எடுத்துக்கொண்டால் அவை வெப்ப நிலையை சேமித்து அதனை மனிதனுக்கு ஏற்ற வகையில் சீர்படுத்த உதவுகின்றன. மேலும் மலைகள் மற்றும் நீர் வீழ்ச்சிகள் என்பன மனஅழுத்தங்களிலிருந்து விடுபட்டு புத்துயிர் பெற உதவுகின்றன.

பறவைகளின் சத்தம், பூக்களின் வண்ணங்கள், மழையின் போதான மண் வாசனை என அனைத்துமே இயற்கையின் விலை மதிக்க முடியாத அம்சங்கள், இவை எமது மனித வாழ்க்கையை மென்மேலும் அழகாக்குகின்றன.

இத்தகைய சிறப்புத்தன்மைகளை எமக்கு கொடையாகப் பொழிகின்ற எமது சூழல் அன்னை இன்று பல சவால்களை எதிர்கொண்டு வருவது மிகவும் வருந்தவேண்டிய விடயமாகவுள்ளது. மனிதன் உயிர் வாழ பல நல்ல சிறப்புக்களை அள்ளித்தரும் எம் அன்னைக்கு இன்று மனிதனே அவனது செயல்களால் அழிவுக்கு இட்டுச் செல்கின்றான். அதாவது காடுகளை அழித்து குடியேற்றங்களை நிறுவுதல், தொழிற்சாலைக்கழிவுகளை உரிய முறையில் அகற்றாமையினால் ஏற்படும் பாதிப்புக்கள், அதிக பொலித்தீன் பாவனை, சட்டரீதியற்ற முறையில் ஆற்றோர மணல் அகழ்வு, சட்டவிரோதமாக காடுகளில் மரங்களை வெட்டுதல், புதைபடிவப் பொருட் களை எரித்தல், மின்னுற்பத்தி நிலையங்களிலிருந்து வெளிவரும் நிலக்கரி, எரிவாயு மற்றும் எண்ணைக்கழிவுகளை உரிய முறையில் அகற்றாமை போன்ற செயற்பாடுகளால் காற்று மாசுபாடு, புவி வெப்பமாதல், சீரற்ற காலநிலை மாற்றம், எரிமலை வெடிப்பு, காட்டுத்தீ பரவுதல், மண்சரிவு, சூறாவளி, சுனாமி மற்றும் பருவமழை பாதிப்பு எனப் பல்வேறு வகையான அனர்த்தங்களை மனிதன் எதிர்கொள்கின்றான்.

எனவே இவற்றைத் தடுக்க மரங்களை நடுதல், பசுமைசார் உற்பத்திகளில் ஈடுபடுதல், கழிவு மீள் சுழற்சி மற்றும் மின்சார வாகனஉறபத்தி போன்றவற்றில் ஈடுபடுலாம். இவற்றை செய்வதன் மூலம் சூழலின் நிலை பேறான தன்மையைப் பேணலாம். இதனைக் கருத்தில் கொண்டு ஜீன் 5 உலக சுற்றுச் சூழல் தினத்தில் தரப்படும் செய்தியானது, நாம் வாழும் சூழல் அது எம் அன்னைக்கும் மேலானது, அதனைப்பாதுகாப்பது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். உலகில் எத்தனை புதிய கோள்கள் கிரகங்கள் தோன்றினாலும் மனிதன் உயிர்வாழத் தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்ட ஒரே கிரகம் பூமி ஆகும். இத்தகைய
அளப்பரிய செல்வங்களை அள்ளித்தரும் எமது அன்னையைப் பாதுகாக்க வேண்டியது எம் ஒவ்வொருவரதும் பாரிய கடமையாகும். மேலும் எமது எதிர்கால சந்ததிக்கும் ஒரு பசுமையான பாதுகாப்பான சூழலைக் கையளிக்கவும் முடியும்.



‘நீங்களும் எழுதலாம் குறுங்கட்டுரை‘ எனும் பகுதியில் உங்கள் கட்டுரைகளும் இடம்பெற வேண்டுமானால் சுமார் 300 சொற்கள் நீளம் கொண்ட உங்கள் கடடுரைகளை info.mathahu@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 0765588554 எனும் வட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்கலாம்!

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects