மட்டக்களப்பு மாவட்டத்தில் பவளப்பாறைகளை பாதுகாத்தல் தொடர்பாக அரச அதிகாரிகளை தெளிவுபடுத்தும் விசேட செயலமர்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கை பவளப்பாறை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இயற்கை வளமாகிய பவளப்பாறைகளை பாதுகாத்தல் தொடர்பான விழிப்புணர்வுகளை அரச அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் விசேட செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் 26.08.2025 அன்று இடம்பெற்றது.

இயற்கைப் பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) அனுசரணையில் இடம்பெற்றுவரும் இத்திட்டத்திற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆய்வுக்காக தெரிவு செய்யப்பட்ட காயங்கேணி கடற்பரப்பில் உள்ள பவளப்பாறைகளின் தன்மைகள், அதன் உயிர்பல்வகைமை, இனப்பெருக்கம் மற்றும் அது அழிவடைவதற்கான மூலகாரணங்கள் தொடர்பாக ஆய்வறிக்கையின் அடிப்படையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.

இதன்போது இயற்கைப் பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியம் சார்பாக கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பீ.எச்.ஜே.பிரேமதிலக, இயற்கைப் பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்தின் திட்ட அலுவலர் சமிந்த கருணாரத்ன, இயற்கைப் பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்தின் திட்ட இணைப்பாளர் கலாநிதி சந்துன் பெரேரா மற்றும் திட்ட அலுவலர் தினிதி சமரதுங்க ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு ஆய்வு தொடர்பான கருத்துக்களை முன்வைத்தனர்.

இயற்கையின் கொடையாகிய பவளப்பாறைகளுடன் தொடர்புடைய விதத்தில் சுயதொழில் முயற்சியில் ஈடுபடும் தொழிலாளர்களை இனங்கண்டு அவர்களுக்கு மாற்றுத் தொழில் முயற்சியில் ஈடுபடுத்த வழியமைத்தல், பவளப்பாறைகள் அகழ்வு, அகற்றப்படுதல், சேதப்படுத்தல் மற்றும் கடல்வளத்தில் விவசாயத்திற்குப் பயன்படுத்தும் கிருமி நாசினி, நஞ்சுப்பொருட்கள், படகுகள், கப்பல்கள் மூலம் ஒயில் வகை கலத்தல், பிளாஸ்டிக் கழிவுகள் கடல் நீரில் கலத்தல் போன்ற விடயங்களை முறையான திட்டத்தோடு தடுத்தல் தொடர்பான பலவிடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

மாவட்ட செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் வீ. நவனீதனின் ஒருங்கமைத்தலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் குறித்த திட்ட அமுலாக்கல் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதேச செயலாளர்கள், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கரையோரப் பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு, விவசாயம், நன்னீர் மீன்வளர்ப்பு, மீன்பிடி, கல்வி ஆகிய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், சுற்றுலாத்துறை, உள்ளூர் அதிகார சபை, சமூக மட்ட அமைப்புக்கள், வர்த்தக சம்மேளனம் ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதுதவிர இத்திட்டத்தின் பங்காளர்களான இலங்கை பவளப்பாறை பாதுகாப்பு அமைப்பு (SLCRI), சர்வோதயா அமைப்பு ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் மற்றும் IUCN அமைப்பின் திட்ட முகாமையாளர் கபில குணவர்தன, சர்வேதயா அமைப்பின் தலைமை முகாமையாளர் இனோஜ் குலதுங்க ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects