இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் 29.08.2025 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
மேலும், இந்த நாணயத்தாள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவினால் கையெழுத்திடப்பட்ட முதலாவது நாணயத்தாலென தெரிவிக்கப்பட்டுள்ளது..
அத்தோடு, புழக்கத்திற்கான நினைவு நாணயத்தாளாக இது வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்த நாணயத்தாள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 5 ஆவது நினைவு நாணயத்தாள் ஆகும்.
தேசிய அபிவிருத்திக்கான அடித்தளமாக பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான மத்திய வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், ” சுபீட்சத்திற்கான ஸ்திரத்தன்மை ” என்ற என்ற ஆண்டு நிறைவு தொனிப்பொருளுக்கு அமைவாக இந்த நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நாணயத் தாளின் தோற்றமானது,
முன்பக்கம்: இந்த நாணயத்தாளின் முன்பக்கத்தில், இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகம், கொழும்பு கலங்கரை விளக்க கடிகாரக் கோபுரம், கொழும்பு நகரின் வானுயர்ந்த கட்டிடங்கள் மற்றும் 75 ஆவது சுதந்திர தின விழா சின்னம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
பின்பக்கம்: நாணயத்தாளின் பின்பக்கத்தில், இலங்கையின் புவியியல் வரைபடம், நீல அல்லி மலர் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் தொலைநோக்கு அறிக்கை என்பன அழகிய வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அம்சங்கள்: பார்வை குறைபாடு உள்ளவர்களுக்காக மேம்படுத்தப்பட்ட நவீன பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தொடு உணர் குறியீடுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந் நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கே.எம்.ஏ.என். தௌலகல, உதவி ஆளுநர் கே.ஜி.பி. சிறிகுமார, நாணயத் திணைக்களத்தின் ஆளுநர் பீ.டீ.ஆர். தயானந்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










