டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களின் உள நலனை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட ‘Beyond Recovery’ புதிய வேலைத்திட்டத்தின் கீழ் அரச அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான முதற்கட்ட செயலமர்வு 19.12.2025 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
இந்த செயலமர்வின் கீழ், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 6 பிரதான மாவட்டங்களில் உளநலம் குறித்த புரிதல் உள்ள மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளதோடு, இந்தப் பயிற்சித் திட்டங்கள் இந்நாட்டின மனநல நிபுணர்களால் நடத்தப்படும்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பு மையங்களில் செயல்படுத்தப்பட வேண்டிய விஞ்ஞான வேலைத் திட்டங்களை தயாரித்தல் மற்றும் ஆலோசனை நிகழ்ச்சித் தொடர்கள் நடத்துதல் உட்பட உளவள ஆலோசனை வேலைத் திட்டங்களை உருவாக்குவது குறித்தும் இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்துரையாடப்பட்டது.
இந்நாட்டின் சமூக நெறிமுறைகள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பை உயர்ந்த நிலைக்கு மேம்படுத்துவது Clean Sri Lanka வேலைத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளதுடன், அதை நனவாக்கும் நோக்கத்துடன் இந்த ‘Beyond Recovery’ மனிதாபிமான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த செயலமர்வில் பங்கேற்று பயிற்சி பெறும் அரச அதிகாரிகள், பாதுகாப்பு மையங்கள் ஊடாக அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உள நலனை மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களை விரைவில் செயல்படுத்துவார்கள்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் Clean Sri Lanka கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான தனுர திசாநாயக்க மற்றும் Clean Sri Lanka வேலைத் திட்டத்தின் அழைப்பாளர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அப்போன்சு, Clean Sri Lanka செயலகத்தின் மேலதிக செயலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர, Clean Sri Lanka செயலகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)














இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










