இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணைக்குழு, விமானப் பயணத்தின் போது பவர் பேங்க் ( Power Bank ) மற்றும் லித்தியம் மின்கல சாதனங்களை பயன்படுத்துவது குறித்து புதிய மற்றும் கடுமையான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
முக்கிய கட்டுப்பாடுகள்
01. விமானத்தின் உள்ளே பவர் பேங்களைப் பயன்படுத்தி தொலைபேசி அல்லது இதர சாதனங்களை மின்னேற்றம் செய்ய இனி அனுமதி இல்லை
02. இருக்கையில் உள்ள மின் குதங்களின் மூலமும் மின்னேற்றம் செய்யக்கூடாது.
03. பவர் பேங்க் மற்றும் உதிரி மின்கலங்களை கைப்பை (Hand Luggage) மூலம் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும், சோதனைக்கு உட்படுத்தும் பயணப்பொதிகளில் (Check-in luggage) வைக்கக் கூடாது.
04. இவற்றை விமானத்தின் மேல்புறம் உள்ள பைகள் வைக்கும் இடத்தில் (Overhead compartment) வைக்கக்கூடாது. ஏனெனில், அங்கு தீப்பிடித்தால் அதை உடனடியாகக் கண்டறிவது கடினம். எனவே, பயணிகளுக்கோ அல்லது காவல்துறையினருக்கோ அங்கிருக்கும் ஆபத்தைக் கண்டறிவதில் தாமதம் ஏற்படும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லித்தியம் மின்கலங்கள் ஏன் ஆபத்தானவை?
லித்தியம் மின்கலங்கள் அதிக ஆற்றல் கொண்டவை. இவை அதிக வெப்பமடைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ தானாகவே தீப்பிடிக்கும் தன்மை கொண்டவை. இவை தீப்பிடித்தால் மற்ற பொருட்களையும் எளிதில் பாதிக்கும் மற்றும் வெடிக்கவும் வாய்ப்புள்ளது.
தரம் குறைந்த மின்கலங்கள், பழைய மின்கலங்கள் அல்லது தவறாகக் கையாளுதல் போன்றவற்றால் மின் கசிவு (Short circuit) ஏற்பட்டு தீ விபத்துகள் நிகழலாம்.
விமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் விமானப் பணியாளர்களுக்கு தீ விபத்து அறிகுறியை (புகை, வெப்பம்) ஆரம்பத்திலேயே கண்டறிய சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
விமானப் பயணத்தின் போது இது குறித்த பாதுகாப்பு அறிவிப்புகளைப் பயணிகளுக்குத் தொடர்ந்து வழங்க வேண்டும்.
விமான நிலைய நுழைவு வாயில் மற்றும் பரிசோதனை செய்யும் இடங்களில் இது தொடர்பான எச்சரிக்கை பலகைகள் மற்றும் காணொளிகளை காட்சிப்படுத்த வேண்டும்.
இந்நிலையில் இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணைக்குழு வெளியிட்டுள்ள இந்த புதிய கட்டுப்பாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்தியாவுடன் தொடர்புடைய விமானங்கள் இலங்கைக்கு வருகின்ற போதும், இலங்கையிலிருந்து விமானங்கள் இந்தியாவுக்கு செல்லும் போது இந்த நடைமுறைகள் தாக்கம் செலுத்தும்
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு (சென்னை, டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு) விமானத்தில் செல்லும் பயணிகள், இந்தியாவின் வான் எல்லைக்குள் நுழையும் போதும் அல்லது இந்திய விமான நிலையங்களில் தரை இறங்கும் போதும் அந்த நாட்டின் சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும்.
ஒரு நாடு பாதுகாப்பு விதியை மாற்றும்போது, அந்த நாட்டிற்குச் செல்லும் அனைத்து சர்வதேச விமான நிறுவனங்களும் அந்த விதியைப் பின்பற்ற வேண்டும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










