மேல் நீதிமன்ற வளாகத்தினுள் வழங்கப்படும் தீர்ப்புகள், இந்நாட்டின் நீதித்துறையின் தன்மை, ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாகும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
சீன அரசாங்கத்தின் உதவியுடன் நவீனமயமாக்கப்பட்ட மேல் நீதிமன்ற வளாகத்தை, மீண்டும் நீதித்துறை நடவடிக்கைகளுக்காகக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சீன மக்கள் குடியரசின் வர்த்தக அமைச்சு, இந்நாட்டு நீதி அமைச்சு மற்றும் சீன சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய இந்தப் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, மேல் நீதிமன்றத்தின் அசல் தோற்றம் மற்றும் கட்டமைப்பைப் பாதுகாத்து, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 9 நீதிபதிகள், 7 நீதிபதிகள், 5 நீதிபதிகள் மற்றும் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுகளுக்கான 07 புதிய உயர் நீதிமன்ற விசாரணை மண்டபங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
அத்துடன் நீதிபதிகளுக்கான 20 புதிய உத்தியோகபூர்வ அறைகள், பணியாளர் வசதிகள், மின்தூக்கிகள், நவீன நூலகம், வழக்கு ஆவணக் காப்பகம், கேட்போர் கூடம் மற்றும் அனைத்து இடங்களையும் உள்ளடக்கிய வகையிலான தானியங்கி கெமெரா அமைப்பைக் கொண்ட அதிநவீன கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட பல நவீன வசதிகளுடன் இந்த வளாகம் புனரமைப்பட்டுள்ளது.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய:
“1988 ஆம் ஆண்டு சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த வளாகம், மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் காலத்தின் தேவைக்கேற்ப இவ்வாறு நவீனமயமாக்கப்படுவது மிக முக்கியமானதொரு படியாகும்.
நீதித்துறை உட்கட்டமைப்பு வசதிகளுக்காகச் செய்யப்படும் முதலீடு என்பது உண்மையில் மக்கள் நம்பிக்கையின் மீதான ஒரு முதலீடாகும். பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான சூழல் மூலம் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மற்றும் கௌரவம் மேலும் வலுப்படுத்தப்படும்.”
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உள்ளிட்ட சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பைப் பாராட்டிய பிரதமர், அனைவருக்கும் சமமான நீதி கிடைக்கும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்த நவீன வசதிகள் உறுதுணையாக அமையும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதம நீதியரசர் பத்மன் சூரசேன, இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷி ஷென்ஹொங் , சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க உள்ளிட்ட உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் பலர் கலந்துகொண்டனர்.
(பிரதமர் ஊடகப் பிரிவு)










இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










