சித்திரைப் புத்தாண்டுக்காகத் தமது ஊர்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காகத் தேவையான விசேட பேருந்து சேவைகள் இன்று (17.04.2026) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை வரையிலும் அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் இந்த விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என மாகும்புர பல் நிலை போக்குவரத்து மத்திய நிலையத்தின் உதவி முகாமையாளர் நிமல் வெத்தசிங்க தெரிவித்தார்.
ஊர்களுக்குச் சென்ற மக்கள் பிரதான நகரங்களுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நேர அட்டவணைகளைத் திருத்தி குறித்த பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த நிமல் வெத்தசிங்க,
“இன்று முதல், சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை முற்பகல் வரையான இந்த நாட்களில் ஊர்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்காக பேருந்துகளை ஈடுபடுத்தியுள்ளோம்.
மக்கள் பிரதான நகரங்களுக்கு இன்று முதல் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
எனவே, பயணிகள் இருக்கும் பட்சத்தில் நாம் முடிந்தவரை நேர அட்டவணைகளை மாற்றி, இந்த நகரங்களிலிருந்து விரைவாக பேருந்துகளை புறப்படச் செய்யத் தயாராக இருக்கிறோம்.” என்றார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










