வீடுகளையும் மரப் பொருட்களையும் அழிக்கும் கறையான்களை (Termites), அவற்றின் இயற்கையான உள்ளுணர்வைப் பயன்படுத்தியே வேட்டையாடும் புதிய முறையை கலிபோர்னியா பல்கலைக்கழக (UC Riverside) விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பொதுவாக கறையான்கள் மரங்களின் வாசனையை வைத்துத் தங்களின் உணவைத் தேடிச் செல்லும். இதனைப் பயன்படுத்திக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள், ஊசி இலை மரங்களில் (Pine trees) இயற்கையாகக் காணப்படும் ‘பைனீன்’ (Pinene) என்ற நறுமணப் பொருளைப் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த வாசனை கறையான்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு மணம் என்பதால், அவை தானாகவே அந்த இடத்தை நோக்கி ஈர்க்கப்படுகின்றன.
இந்த முறையில், குறிப்பிட்ட மரக்கட்டைகளில் ‘பைனீன்’ வாசனையைத் தடவி, அதனுள் மிகச் சிறிய அளவில் பூச்சிக்கொல்லி மருந்தை மறைத்து வைக்கின்றனர். உணவின் வாசனையால் கவரப்பட்டு வரும் கறையான்கள், அந்த விஷத்தை உட்கொண்டவுடன் அழிகின்றன.
வழக்கமான முறைகளில் கறையான்களை அழிக்கும் போது சுமார் 70% மட்டுமே வெற்றி கிடைத்தது. ஆனால், இந்த புதிய நறுமணப் பொறி முறையைப் பயன்படுத்தும் போது, கறையான்களின் இறப்பு விகிதம் 95 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இக் கண்டுபிடிப்பின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், வீடு முழுவதும் நச்சுப் புகையை (Fumigation) பரப்ப வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறைகிறது.மனிதர்களுக்கு நச்சுத்தன்மையுள்ள வேதிப்பொருட்களின் தாக்கம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.
குறைந்த செலவில் அதிக பலன் கிடைக்கிறது.இயற்கையான வாசனையைக் கொண்டே கறையான்களை வீழ்த்தும் இந்த முறை, பூச்சிக் கட்டுப்பாட்டுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










