ஆண்களை விட அதிகமாக பெண்களுக்கு பித்தப்பை கற்கள்……….
இன்றைய சூழலில் எம்மில் பலரும் ஏற்படுத்திக் கொண்ட உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தின் காரணமாக ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் பித்தப்பை கற்களால் பாதிக்கப்படுகிறார்கள் என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக ஒரு ஆணுக்கு இரண்டு பெண்கள் – பெண்மணிகள் என இந்த பித்தப்பை கற்கள் பாதிப்பின் சதவீதம் இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இதற்கான நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் கூடிய சிகிச்சை அறிமுகமாகி பலன் அளித்து வருகிறது என்றாலும்… எம்மில் பலரும் பித்தப்பை கற்கள் எதனால் உருவாகிறது? என்பது குறித்த முழுமையான விழிப்புணர்வை பெற்றிருக்கவில்லை.
அது தொடர்பாக எம்முடைய வைத்தியர்கள் பின்வரும் விளக்கங்களை வழங்குகிறார்கள். இதனை நாம் வாசித்து பித்தப்பை கற்கள் வராமல் தற்காத்துக் கொள்ள வேண்டும்.
இன்றைய சூழலில் எம்முடைய இளம் தலைமுறை பெண்களும், பெண்மணிகளும் தங்களின் சுய அடையாளத்திற்காகவும், குடும்பத்தின் பொருளாதார தேவை காரணமாகவும் பணிக்கு செல்கிறார்கள்.
பணியிடங்களில் தங்களுடைய தோற்றம் குறித்த எதிர்மறையான விமர்சனங்களை தவிர்ப்பதற்காக.. அதற்கு முக்கியத்துவமும் வழங்குகிறார்கள்.
குறிப்பாக உடல் எடை அதிகரித்து விட்டால்… அதனை திடிரென அதி விரைவாக குறைக்க தொடங்குகிறார்கள். அதற்காக உணவு முறையில் மாற்றம் …தீவிர உடற்பயிற்சி… என அவர்களுக்கு சௌகரியமான வகையில் முயற்சிகள் மேற்கொள்வதால்.. இந்த வளர்ச்சிதை மாற்றத்தின் காரணமாக பித்தப்பையில் கற்கள் உருவாகிறது.
மேலும் பல பெண்மணிகள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் நலன் கருதி ஆன்மீக ரீதியாக இறை பக்தியை பின்பற்றி அதில் விவரிக்கப்பட்டிருக்கும் வகையில் விரதத்தை மேற்கொள்வார்கள். இந்த உண்ணா நிலையின் காரணமாக பித்தப்பையின் இயல்பான இயக்கத்தில் சீரற்ற நிலை ஏற்பட்டு, அதன் காரணமாக பித்தப்பை கற்கள் உருவாகிறது. குறிப்பாக இவர்களுக்கு கொலஸ்ட்ரால் தொடர்பான கற்கள் ஏற்பட்டு பாதிப்பை உண்டாக்குகிறது.
சில பெண்மணிகள் பல காரணங்களால் உடற் பருமனாக இருப்பார்கள். உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலின் படி இயல்பாக இருக்க வேண்டிய உடல் எடையை விட 30 கிலோ முதல் 50 கிலோ வரை எடை கூடுதலாக இருக்கும் பெண்களுக்கும், பெண்மணிகளுக்கும் அவர்களுடைய பித்தப்பையில் சுருங்கி விரியும் தன்மையில் பாரிய அசௌகரியம் ஏற்படுவதாலும், இயல்பான அளவை விட கூடுதலாக கொழுப்பு சேகரமாவதாலும் பித்தப்பை கற்கள் உண்டாகிறது.
நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்மணிகளுக்கும் இரண்டு அல்லது மூன்று குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கும் அவர்களுடைய ஹோர்மோன் சுரப்பியில் ஏற்படும் சமச்சீரற்ற நிலையின் காரணமாக பித்தப்பையில் கற்கள் உண்டாகிறது. குறிப்பாக பெண்களுக்கு இயல்பாக சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் எனும் ஹோர்மோனின் அளவு அதிகரித்தால்.. பித்தப்பையின் சுருங்கி விரைவில் தன்மையில் தடை ஏற்படும். மேலும் பிரசவ காலங்களில் பெண்களுக்கு கொலஸ்ட்ரால் எனும் கொழுப்பின் அளவு அதிகரிப்பதால்… அவர்களுக்கு பித்தப்பையில் கற்கள் ஏற்படுகிறது.
சில பெண்களுக்கும் , பெண்மணிகளுக்கும் இத்தகைய பித்தப்பை கற்கள் மரபணு குறைபாடு காரணமாக பரம்பரையாகவும் தொடரக்கூடும். மேலும் பொதுவாக பெண்கள் கருவுற்றிருக்கும் தருணத்தில் அதனை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையின் போது தான் பெரும்பாலானவர்களுக்கு அவர்கள் எழுதிய பித்தப்பையில் கற்கள் இருப்பதை துல்லியமாக அவதானித்து இதைத் தவிர சில பெண்களுக்கு அவர்களுடைய குருதியில் ஏதேனும் குறைபாடு இருந்தாலும் அதன் காரணமாகவும் பித்தப்பையில் கற்கள் உருவாக கூடும்.
எனவே நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்மணிகள் அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று பித்தப்பை கற்கள் உள்ளனவா? என்ற பரிசோதனையை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
வைத்தியர் கண்ணன்


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










