டைனோசர் காலத்தில் ஆழ்கடலில் ஒரு இராட்சத ஒக்டோபஸ்கள் வாழ்ந்ததை விஞ்ஞானிகள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஜப்பானின் ஹொக்கைடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட புதிய ஆய்வில், ‘நனைமோடெயுதிஸ் ஹாகார்டி’ (Nanaimoteuthis haggarti) என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த இனம் சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்கடலில் சிம்மசொப்பனமாக விளங்கியுள்ளது.
சுமார் 62 அடி (19 மீட்டர்) நீளம் கொண்ட இந்த ஒக்டோபஸ், இன்று நாம் காணும் இராட்சத கணவாய் மீன்களை விடவும் பல மடங்கு பெரியதாகும்.
ஒக்டோபஸ்கள் மென்மையான உடல் அமைப்பைக் கொண்டவை என்பதால், அவற்றின் எலும்புகள் புதைபடிவமாக மாறுவது கடினமாகும்.
எனினும், ஜப்பான் மற்றும் கனடா பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட அவற்றின் கடினமான தாடைப் புதைபடிவங்களை (Fossil Jaws) ஆய்வாளர்கள் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தியுள்ளனர்.
மிகவும் நவீனமான செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பாறைகளுக்குள் உறைந்திருந்த இந்தப் பாகங்கள் டிஜிட்டல் முறையில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் இந்த ஒக்டோபஸின் வலிமையான தாடைகள், கடினமான எலும்புகள் மற்றும் ஓடுகளைக் கூட நொறுக்கித் தின்னும் திறன் கொண்டவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை கடல் உணவுச் சங்கிலியில் முதுகெலும்புள்ள பெரிய விலங்குகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தின என்ற கருத்து நிலவி வந்தது.
ஆனால், முதுகெலும்பற்ற இந்த ‘கிராக்கன்’ ஒக்டோபஸ்கள், டைனோசர் காலத்துக் கடலில் வேட்டையாடும் உயிரினமாக இருந்ததை இக்கண்டுபிடிப்பு உறுதி செய்துள்ளது.
ஆழ்கடலின் மர்மங்கள் இன்னும் முழுமையாக விலகவில்லை என்பதற்குச் சான்றாக அமைந்துள்ள இந்த ஆய்வு, அறிவியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










