வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்படும் அபயம் குறைகேள் வலையமைப்பினால், குறுகிய காலத்திற்குள் 250 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை அபயத்திற்கு அறிவிப்பதன் ஊடாக ஒரு வாரத்திற்குள் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
உணவு , ஊட்டச்சத்து, கல்வி , சுகாதாரம், பாதுகாப்பு, உளவளம், சிறுவர், இளையோர் மற்றும் மகளிர் விவகாரம் உள்ளிட்ட பிரிவுகளில் மாணவர்கள், சிறார்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கான தீர்வுகளை அரச பொறிமுறையின் ஊடாக அபயம் குறைகேள் வலையமைப்பினால் பெற்றுக்கொடுக்கப்படுகிறது.
வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் முறைப்பாடுகள் கிடைக்கின்ற போதிலும், யாழ். மாவட்டத்திலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது. மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், போதைபொருள் பாவனையால் ஏற்படும் சிக்கல்கள் தொடர்ப்பிலேயே அதிக முறைப்பாடுகள் அபயம் குறைகேள் வலையமைப்பிற்கு கிடைத்துள்ளதுடன், அவற்றுக்கான தீர்வுகளும் உடன் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் அபயம் வலையமைப்பு செயற்படுகிறது. வடக்கு மாகாணத்தின் எந்த பகுதியில் வசிப்பவராக இருந்தாலும், முறைப்பாடுகளை சமர்பிக்க முடியும். முறைப்பாடுகள் செய்வோரின் தகவல்கள் இரகசியமாக பாதுகாக்கப்படும்.
070 666 66 77 என்ற இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்வதன் மூலமும், வாட்ஸ்அப், வைபர் ஊடாகவும் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும். childhelpnp@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும், “ அபயம் – ஆளுநர் செயலகம், வடக்கு மாகாணம், பழைய பூங்கா,சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்” என்ற முகவரிக்கும் முறைப்பாடுகளை அனுப்பி வைக்க முடியும். அத்துடன் ஆளுனர் செயலகத்திற்கு நேரடியாக வருகை தந்து எழுத்துமூலம் உங்களின் மனுக்களை சமர்பிக்க முடியும். அபயம் குறைகேள் வலையமைப்பானது 24 மணித்தியால சேவையை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇