ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் (UDA) சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் 18.05.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் திட்டமிடப்பட்டுள்ள புதிய வேலைத்திட்டங்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இத்திட்டங்களுக்காக இவ்வருடம் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை, இந்த நிதியாண்டிற்குள்ளேயே சரியான முறையில் பயன்படுத்துவதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
பல்வேறு நிறுவனங்கள் இணைந்து செயல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி இறுதி முடிவை எடுத்தல், வேலைத்திட்டங்களைச் செயல்படுத்தும்போதும் பராமரிக்கும்போதும் அந்தந்த நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட பொறுப்புக்களை வழங்குவது போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
களனி கங்கை சார்ந்த வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டம் உட்பட கொழும்பு நகரின் நீர் முகாமைத்துவத் திட்டங்கள், பேர வாவி அபிவிருத்தித் திட்டம், கொழும்பு சார்ந்த இரத்மலானை, மொரட்டுவை போன்ற பகுதிகளில் குறைந்த வருமானம் பெறும் வீடுகளுக்கான விசேட வேலைத்திட்டத்தின் தேவை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், சில வேலைத்திட்டங்களைச் சரியாக முகாமைத்துவம் செய்ய விசேட மாதிரி ஒன்றின் தேவை குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இங்கு சுட்டிக்காட்டினார்.
இந் நிகழ்வில் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில சி.கே. பெரேரா, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் (UDA) தலைவர் எம். ஜி. ஹேமசந்திர ஆகியோருடன் நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபை (USDA), இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் (SLLDC), தேசிய பெளதீக திட்டமிடல் திணைக்களம் (NPPD), கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபை (CMA) ஆகிய நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










