2026-2030 காலத்திற்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2026-2030 காலத்திற்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) 16.06.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் (NEDP) 2026–2030 என்பது, நாட்டின் ஏற்றுமதித் துறையை வலுப்படுத்துதல் மற்றும் நிலையான ஏற்றுமதி சார்ந்த பொருளாதார வளர்ச்சியை அடைதல் ஆகிய நோக்கங்களுடன், 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கத்தின் கொள்கை வழிகாட்டுதலுக்கு இணங்க வகுக்கப்பட்ட ஒரு முக்கிய தேசியத் திட்டமாகும்.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டுதல் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் (EDB) தலைமையின் கீழ், ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) கொள்கை அடிப்படையிலான கடன் (PBL) திட்டம் வழங்கிய தொழில்நுட்ப உதவியுடனும் இந்த மூலோபாயத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த் திட்டம், முக்கிய அரசாங்க நிறுவனங்கள், தனியார் துறை பங்குதாரர்கள் மற்றும் அபிவிருத்தி பங்காளிகளுடன் நெருங்கிய ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட விரிவான கலந்தாய்வு செயல்முறையின் விளைவாகும்.

இலங்கையின் ஏற்றுமதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் மேம்படுத்துவதற்குமான உத்தியோகபூர்வ மூலோபாயக் கட்டமைப்பாக இத்திட்டத்தை (2026-2030) அங்கீகரிப்பதற்காக, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு, 2026 மே 4 ஆம் திகதி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. இத்திட்டமானது அரசாங்க நிறுவனங்கள், தனியார் துறை வல்லுநர்கள் மற்றும் சர்வதேச அபிவிருத்திப் பங்காளர்களின் பொதுவான இணக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற தேசிய தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இலங்கையின் ஏற்றுமதிப் போட்டித்திறனை மேம்படுத்தவும், 2030-ஆம் ஆண்டிற்குள் 36 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவாய் இலக்கை அடையவும் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இலங்கையை பிராந்திய மற்றும் உலகளாவிய சந்தைகளுக்குச் சேவை வழங்கும் போட்டித்தன்மைமிக்க விநியோகச் சங்கிலி (Logistics) மற்றும் அறிவு சார்ந்த ஏற்றுமதி மையமாக மாற்றுவதே இதன் முதன்மையான தொலைநோக்காகும். இந்த மூலோபாயத் திட்டம், ‘கிடைமட்டத் துறைகள்’ (Horizontals) மற்றும் ‘முன்னுரிமைத் துறைகள்’ (Verticals) ஆகிய ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இரண்டு முக்கிய தூண்களை அடிப்படையாகக் கொண்டதுடன், இதன் மூலம் இலங்கையின் ஏற்றுமதிப் போட்டித்தன்மையை வலுப்படுத்துவதற்கும், பன்முகப்படுத்துவதற்கும் மற்றும் நிலையான வளர்ச்சிக்கும் தேவையான அடித்தளம் அமைக்கப்படுகிறது.

அனைத்து முன்னுரிமைத் துறைகளின் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் ஆதரவளிப்பதற்குத் தேவையான அடித்தளத்தை வழங்கும் கிடைமட்டத் துறைகளுக்குள் (Horizontals),வர்த்தகச் சங்கிலி (Logistics) மற்றும் ஒருங்கிணைந்த மைய செயல்பாடுகள், வர்த்தக வசதிகளை வழங்குதல், வர்த்தக நிதி மற்றும் வணிக மற்றும் முதலீட்டுச் சூழல்களின் சீர்திருத்தங்கள், வர்த்தக ஊக்குவிப்பு மற்றும் சந்தை உறவுகள், தர முகாமைத்துவம், தரநிலைகள், சூழல், சமூகம் மற்றும் ஆளுமை (ESG) திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கங்கள் ஆகியவை அடங்குகின்றன.

ஏற்றுமதி பன்முகப்படுத்தல் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்தியை அதிகரித்தல், உலகளாவிய சந்தையில் இலங்கையை மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக நிலைநிறுத்துதல் ஆகியவற்றிற்காக மோட்டார் வாகன உதிரிபாகங்கள், கனிம அடிப்படையிலான தொழிற்துறைகள், இறப்பர் சார்ந்த கைத்தொழில்கள், கடல்சார் கைத்தொழில்கள் (படகு மற்றும் கப்பல் தயாரித்தல் உட்பட), மசாலாப் பொருட்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட பொருட்கள், டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும் சேவைகள், மின் மற்றும் மின்னணு உதிரிப்பாகங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் பானங்கள் ஆகிய எட்டு (08) முன்னுரிமை ஏற்றுமதித் துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த தேசியத் திட்டத்தைத் தயாரிப்பதில் அரச நிறுவனங்கள், தனியார் துறை, சிவில் அமைப்புகள் மற்றும் சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் உட்பட 300-க்கும் மேற்பட்ட தரப்பினரின் பங்களிப்பு பெறப்பட்டுள்ளது. 2025 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் 2026 ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்ட செயலமர்வுகள் மூலம் இதற்கான பரந்த பொதுவான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

வலுவான நிர்வாக மற்றும் கண்காணிப்பு கட்டமைப்பின் ஆதரவுடன் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம், உள்நாட்டு உற்பத்திகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும், நாட்டின் நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இந்த தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டமானது, இலங்கை பொருளாதாரத்தின் புதிய முன்னோடியாக எதிர்காலத்தில் செயல்படும்.

இந் நிகழ்வில் தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் வலுசக்தி அமைச்சின் செயலாளருமான ரசல் அபொன்சு, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects