ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரின் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த விசேட பிரதிநிதி வைத்தியர் நஜாத் மாலா ம’ஜித் (Najat Maalla M’jid) தலைமையிலான யுனிசெப் பிரதிநிதிகள் குழு, 25.06.2026 அன்று பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தது.
குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதில் இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்பையும் ஈடுபாட்டையும் மேலும் பலப்படுத்துவது குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் தடுப்பதற்கும் அவற்றுக்கு பதிலளிப்பதற்கும் எடுக்கப்படும் முயற்சிகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
இச் சந்திப்பின்போது, குறிப்பாக ’தித்வா’ சூறாவளி பாதிப்பின் போது இலங்கைக்கும், கல்வி மற்றும் ஆரம்பகாலக் கல்விச் சீர்திருத்தங்களுக்கும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கான முன்முயற்சிகளுக்கும் யுனிசெப் வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவை பிரதமர் பாராட்டினார்.
இலங்கை கொள்கை உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ள போதிலும், அவற்றை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துவதே தற்போதைய சவாலாக உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். குழந்தை பாதுகாப்பிற்குப் பொறுப்பான பல்வேறு தரப்பினருக்கிடையிலான ஒருங்கிணைப்பை பலப்படுத்துவதன் அவசியத்தையும், குழந்தை பாதுகாப்புச் சேவைகளை வழங்குவதில் முன்னிலை உத்தியோகத்தர்களின் முக்கிய பங்கையும் அவர் வலியுறுத்தினார்.
குழந்தை பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் பரிந்துரைக்கும் வழிமுறைகளில் காணப்படுகின்ற இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கு அனைத்துப் பங்குதாரர்களையும் ஒன்றிணைப்பதன் முக்கியத்துவத்தை யுனிசெப் பிரதிநிதிகள் இதன்போது சுட்டிக்காட்டினர். அத்தோடு, குழந்தைகள் துஷ்பிரயோகம் குறித்து முறைப்பாடுகளைச் செய்வதற்கும் உதவியைப் பெறுவதற்கும் தெளிவான மற்றும் அணுகக்கூடிய பொறிமுறைகளை உறுதி செய்வதன் அவசியம் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது, முன்களப் பணியாளர்களின் திறன்களைப் பலப்படுத்துவதன் முக்கியத்துவம், குறிப்பாக உளவியல்-சமூக ஆதரவு, முன்கூட்டிய கண்டறிதல், நேரடி அறிகுறிகளை இனங்காணுதல், திறம்பட செவிமடுக்கும் உத்திகள் மற்றும் தனியுரிமையைப் பாதுகாத்தல் ஆகிய துறைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. இந்த விவாதங்களில், குழந்தைகளை இணையவழி வன்முறை மற்றும் சுரண்டலிலிருந்து பாதுகாப்பதற்கான வளர்ந்து வரும் முக்கியத்துவமும், டிஜிட்டல் சூழல்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டியதன் தேவை ஆகிய விடயங்களை வைத்தியர் Najat Maalla M’jid அவர்கள் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பில், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரின் சிறப்புப் பிரதிநிதி வைத்தியர் நஜாத் மாலா ம’ஜித் (Najat Maalla M’jid), யுனிசெப் பிரதிநிதி (எம்மா பிரிகாம்) Emma Brigham, ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச் (Marc-André Franche), வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
(பிரதமர் ஊடகப் பிரிவு)






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










