‘செல்வச்செழிப்பான நாடு அழகான வாழ்க்கை’ என்ற தேசிய கொள்கைக்கு அமைவாக, ‘இலங்கையர் என்றொரு தேசம் உலகளாவிய பிரஜை’ என்ற நோக்கத்தை முன்வைத்து 2026 ஆம் ஆண்டு இம் மாதம் 01 ஆம் திகதி முதல் 05 ஆம் திகதி வரை அரச கரும மொழிகள் தினம் மற்றும் அதனுடன் இணைந்த மொழி வாரத்தை நாடு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த ஆண்டின் மொழி வாரத்திற்கான தொனிப்பொருள் ‘மொழியை வளர்ப்போம் இதயங்களை வெல்வோம்’ என்பதாகும்.
இம்முறை மொழி வாரத்தில்;
ஜூலை 01 ஆம் திகதி அரச கரும மொழிகள் தினம் மற்றும் ஆரம்ப நாளாகவும்,
ஜூலை 02 ஆம் திகதி ‘இருமொழியை வளர்ப்போம் – நாட்டைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் பாடசாலை நாளாகவும்,
ஜூலை 03 ஆம் திகதி ‘மொழி ஒரு ஒளி’ என்ற தொனிப்பொருளில் பொது மக்கள் நாளாகவும்,
ஜூலை 04 ஆம் திகதி ‘மொழியின் விடியல்’ என்ற தொனிப்பொருளில் இளைஞர் நாளாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஜூலை 05 ஆம் திகதி இதன் இறுதி நாளாகும்.
இந்த நிகழ்ச்சித் தொடரை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக அரச கரும மொழிகள் ஆணைக்குழு, அரச கரும மொழிகள் திணைக்களம் மற்றும் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து செயற்படுகின்றன.
அரச கரும மொழிவழிக் கொள்கையை திறம்பட நடைமுறைப்படுத்துவதற்கும், தேசிய சகவாழ்வை மேம்படுத்துவதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் வழிகாட்டலில் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் விசேட மொழி மேம்பாட்டு நிகழ்ச்சித் தொடர் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் கீழ் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை இலக்கு வைத்து மொழி முகாம்கள், வினாடி-வினா போட்டிகள், இருமொழி இசை ரசனை நிகழ்ச்சிகள் மற்றும் நூலக வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள் மாவட்ட மட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ளன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










