தபால் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதியின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு!

இலங்கை தபால்துறையை நவீனமயப்படுத்துதல் தொடர்பான பூர்வாங்கக் கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் தபால் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் 07.08.2026 அன்று நடைபெற்றது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் ஜூலை 09 ஆம் திகதி சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் 2027 வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலின் போது வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய, தபால் திணைக்களத்தை நவீனமயமாக்குவதில் நிலவும் தற்போதைய சிக்கல்களைக் கண்டறிவதையும், தபால் சேவையை மிகவும் செயற்திறனான மற்றும் இலாபகரமான சேவையாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் மற்றும் ஆற்றல்களைக் கண்டறிவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

தற்பொழுது தபால் திணைக்களம் வங்கி மற்றும் காப்புறுதி நிறுவனங்களுடன் இணைந்து நிதிச் சேவைகள், சம்பிரதாய தபால் சேவைகள் மற்றும் பொருட்கள் விநியோகம் ஆகிய மூன்று பிரதான வழிகளில் தனது சேவைகளை வழங்குவதாக தபால் மா அதிபர் எஸ். ஆர். டப்ளியூ. எம். ஆர். பி. சத்குமார இங்கு சுட்டிக்காட்டினார்.

பொருட்கள் விநியோகத்திற்கான பெரும் சாத்தியக்கூறும் சந்தை வாய்ப்பும் தற்போது உருவாகியுள்ளது என்றும், சந்தை வாய்ப்புகளில் 10-15% பங்களிக்கும் அந்தச் சேவைகளை விரைவாக விரிவுபடுத்த வாய்ப்புள்ளது என்றும் தபால் மா அதிபர் இங்கு தெரிவித்தார்.

குறிப்பாக அதற்கு, வர்த்தக முடிவுகளை எடுக்கும் திறனை அதிகரித்தல், இலாபகரமான சேவைகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரித்தல் போன்ற மறுசீரமைப்பு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய தபால் மா அதிபர், இந்த நோக்கத்திற்காக திறைசேரியுடன் இணைந்து தற்போது ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

உலக தபால் சேவை, அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களுக்கு முகங்கொடுத்து, நவீன விடயங்களுடன், தன்னை மாற்றிக்கொண்டு அபிவிருத்தியில் முன்னேறியுள்ளது என்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இதன்போது தெரிவித்தார்.

சம்பிரதாய தபால் சேவைகள் படிப்படியாகக் கைவிடப்பட்டு வரும் வேளையில், இலத்திரனியல் வர்த்தகம் (E – Commerce) மற்றும் இணைய வழி அடிப்படையிலான பொருட்கள் விநியோக நடவடிக்கைகள் விரிவடைந்து வருவதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் இங்கு சுட்டிக்காட்டினார்.

தபால் சேவையின் சம்பிரதாய செயல்பாடுகளில் ஏற்படும் குறைவை விட, அதனால் உருவாக்கப்படும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்றும், அந்தப் புதிய வர்த்தக வாய்ப்புகளில் கவனம் செலுத்தும் வகையில் திணைக்களத்தின் ஊழியர்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

தபால் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் தேசிய மற்றும் சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும், அந்த நோக்கத்திற்காக சேவைகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் தபால் திணைக்களத்திற்கு உள்ளன என்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மேலும் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரொஹான் ஜயதிலக, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் (தபால்) ஆர். ஜி. கே. விஜேசிங்க, பிரதி தபால் மா அதிபர் (செயல்பாடுகள்) எச். எம். பி. ஹேரத், பிரதி தபால் மா அதிபர் (அபிவிருத்தி) துசித ஹுலங்கமுவ, பிரதி தபால் மா அதிபர் (நிர்வாகம்) ஜி. சி. ஐ. டி சில்வா, முகாமைத்துவத் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் எச். ஏ. எஸ். பி. ஹெட்டியாரச்சி மற்றும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects