சிறிய மற்றும் நடுத்தர அளவிலான குளங்களின் புனரமைப்புப் பணிகளை எதிர்வரும் மாதத்திற்குள் விரைவாக மேற்கொள்ளுங்கள் – ஜனாதிபதி

மாகாண சபைகளினால் 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் 21.08.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

மாகாண மட்டத்தில் தற்போது 30,923 அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், அவற்றின் முன்னேற்றம் மற்றும் அவற்றில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், கல்வி, சுகாதாரம், விவசாயம், கால்நடை வளங்கள் மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

மத்திய அரசும் மாகாண சபைகளும் ஒரே கொள்கையின் கீழ், தங்களது துறைசார்ந்த எல்லைக்கு உட்பட்ட திட்டங்களையும் வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேசிய கொள்கைகளின் அடிப்படையில் வேலைத்திட்டங்களைத் திட்டமிடுவது மத்திய அரசுக்குரிய பொறுப்பாகும் என்றும், அதனடிப்படையில் செயற்திட்டங்களைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவது மாகாண சபைகள் மட்டத்தில் நடைபெற வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இங்கு திட்டங்கள் இரட்டிப்பாவதைத் தவிர்ப்பதற்காக அரச பொறிமுறையில் தரவுகளும் தகவல்களும் திறம்படப் பரிமாறப்படுவதோடு, முறையான ஒருங்கிணைப்புடன் அது இடம்பெற வேண்டும் எனவும், இதன் மூலம் தேவையற்ற திட்டங்களுக்கு வளங்கள் வீணடிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், அவசியமான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் வாய்ப்புக்கிடைக்கும் எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், வெளிநாட்டுக் கடன் மற்றும் நிதி உதவிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத் திட்டங்களை வெற்றியடையச் செய்து, உரிய காலத்தில் அவற்றை நிறைவுசெய்வதுடன், அதன் பலன்களை மக்களுக்கு வழங்குவதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

கடும் நிதி ஒழுக்கத்தைப் பேணி, உரிய செலவீன எல்லைக்குள் செயற்பாடுகளைத் திட்டமிட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அடுத்த ஆண்டுக்கான பணிகளை உரிய நேரத்தில் ஆரம்பிக்கக் கூடிய வகையில் நவம்பர் மாதத்திற்குள் அனைத்து வேலைத் திட்டங்களின் திட்டமிடல்களையும் பூர்த்தி செய்யுமாறும் பணிப்புரை விடுத்தார்.

கமநல சேவைகள் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மாகாண சபைகள் ஆகிய 3 நிறுவனங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் நீர்ப்பாசன மறுசீரமைப்புப் பணிகள் தேசிய மட்டத்திலான ஒருங்கிணைந்த திட்டத்திற்கமைய செயற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும், பல்வேறு வெளிவாரித் திட்டங்களின் கீழ் பரந்துபட்டிருக்கும் குளங்களின் புனரமைப்புப் பணிகளை ஒரே மத்திய நிலையத்திற்குக் கொண்டுவருவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ள எல்-நினோ நிலைமைக்கு முகங்கொடுப்பதற்காக, சிறு போகத்திற்குப் பின்னர் பெரும் போகம் ஆரம்பமாவதற்கு முன்னர் உள்ள குறுகிய காலத்தில், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான குளங்களின் கொள்ளளவை அதிகரிப்பதுடன் அவற்றை உடனடியாக புனரமைக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வழங்கப்பட்டுள்ள நிதியைப் பயன்படுத்தி முன்னுரிமையாகக் கருதி அந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் பணிப்புரை விடுத்தார்.

பாடசாலைக் கட்டமைப்பை மீள ஸ்தாபிக்கும் வேலைத்திட்டம் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கம் பிள்ளைகளுக்கு இழைக்கப்படும் அநீதியைத் தவிர்ப்பதாகும் என ஜனாதிபதி வலியுறுத்தினார்.

50 பேருக்கு குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை இணைக்கும் போது, அந்தப் பாடசாலைகளுக்கு நேரில் சென்று அவற்றின் பௌதிக நிலை மற்றும் தரவுகளை ஆராய்ந்து முடிவெடுப்பதன் முக்கியத்துவத்தை விளக்கிய ஜனாதிபதி, அதற்காக போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவோ அல்லது தேவைப்பட்டால் கொடுப்பனவு ஒன்றை வழங்கவோ அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி இந்த திட்டமிடல்களை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

கூட்டுறவுப் பொறிமுறைமைக்கும் மாகாண சபைகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், கூட்டுறவுப் பொறிமுறைமைக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகள் மற்றும் உபகரணங்களை வழங்குவது போன்ற நடவடிக்கைகளுக்கு மாகாண சபைகள் பங்களிப்பு வழங்கி வருவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

அனைத்து மாகாண சபைகளிலும் எழுந்துள்ள பொதுவான பிரச்சினையான தொழில்நுட்ப அதிகாரிகளின் பற்றாக்குறை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், தொழில்நுட்ப உதவி அதிகாரிகளை இணைத்துக்கொண்டு அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக விரைவான வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

டித்வா அனர்த்த நிலைமைக்காக அரசாங்கம் ஒதுக்கிய 500 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுகளில், 102 பில்லியன் ரூபா மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான திட்டங்களை துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதி இங்கு மேலும் பணிப்புரை விடுத்தார்.

இந் நிகழ்வில் தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான ரோஷன் கமகே, கபில ஜனக பண்டார, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும ஆகியோருடன் மாகாண பிரதம செயலாளர்கள், நிதி ஆணைக்குழு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects