கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய மற்றும் மார்பு அறுவை சிகிச்சை சேவைகளை விரிவுபடுத்தி, நோயாளர்களின் காத்திருப்புப் பட்டியலை விரைவாகக் குறைப்பதற்காக விசேட முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் 25.08.2026 அன்று கைச்சாத்திடப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சு மற்றும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கிடையே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியநிபுணர் அனில் ஜாசிங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த (ஓய்வு) மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக உபவேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக குமார ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சமர்ப்பித்த அமைச்சரவை யோசனைக்கு அமைவாகவே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக போதனா வைத்தியசாலையில் நவீன அறுவை சிகிச்சை கூடங்கள் மற்றும் அதிநவீன உபகரணங்கள் இருந்தபோதிலும், வைத்தியநிபுணர்கள் உள்ளிட்ட பணியாளர் பற்றாக்குறை நிலவிவருகிறது. இந்நிலையில், தேசிய வைத்தியசாலையில் அறுவைச்சிகிச்சைக்காக முன்பதிவு செய்யப்பட்ட பெருமளவிலான நோயாளர்கள் நீண்டகாலமாக காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர்.
இதற்குத் தீர்வாக, தேசிய வைத்தியசாலையின் சேவைகளை விரிவுபடுத்தும்வகையில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் வசதிகளைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, தேசிய வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள் பல்கலைக்கழக வைத்தியசாலையில் நோயாளர்களுக்கான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.









இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()







