உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி என்பது ஒரு அரசாங்கம் வெறுமனே பௌதிகக் கட்டுமானங்களை மாத்திரம் மேற்கொள்வதை குறிக்காது என்றும், அது தேசிய அபிவிருத்திக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு வலுவான கருவி என்பதால், உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக எடுக்கப்படும் தீர்மானங்கள் நாட்டு மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு தீர்க்கமான நடவடிக்கையாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் 24.08.2026 அன்று கொழும்பில் ஆரம்பமான பசுபிக் அளவு மதிப்பீட்டாளர் சங்கத்தின் (PAQS) 2026 வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை அளவு மதிப்பீட்டாளர் நிறுவனத்தினால் (IQSSL) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாடு ஆகஸ்ட் 21 முதல் 25 ஆம் திகதி வரை “Constructing the Evolution: Unleashing Human Intelligence” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்றது.
தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இன்றைய உலகில் நிர்மாணத்துறையின் எதிர்காலம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அளவு மதிப்பீட்டாளர் தொழில்சார் நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் இத்துறையின் முன்னணி நிபுணர்கள் பலர் இம்மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.
மாநாட்டை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பிரதமர்,
உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி என்பது எந்தவொரு அரசாங்கத்திற்கும் வெறுமனே பௌதிகக் கட்டுமானங்களை மேற்கொள்வதை மாத்திரம் குறிக்காது எனக் குறிப்பிட்டார். அது தேசிய அபிவிருத்திக்காகப் பயன்படுத்தக்கூடிய ஒரு வலுவான கருவியாகும் என்றும், உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக இன்று எடுக்கப்படும் தீர்மானங்கள் நாட்டு மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தீர்க்கமான நடவடிக்கையாகும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
இன்று எடுக்கப்படும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பான தீர்மானங்கள் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கைத் தரம், தாங்குதிறன் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றில் நேரடியாக தாக்கம் செலுத்துவதால், அவை நீண்டகால முதலீடுகளாகக் கருதப்பட வேண்டும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அளவு மதிப்பீட்டாளர்களின் தற்போதைய பங்களிப்பு தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிரதமர், அவர்கள் பாரம்பரிய அளவீடுகள் மற்றும் செலவு மதிப்பீடுகளுக்கு அப்பால் சென்று, முதலீட்டு மதிப்பீடு, இடர் முகாமைத்துவம், செலவுத் திட்டமிடல், ஒப்பந்த நிர்வாகம் மற்றும் பேண்தகுதன்மை உள்ளிட்ட பரந்த அளவிலான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
சிக்கலான உட்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பில் சரியானதும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டதுமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு இந்தத் தொழில்சார் தலையீடு அரசாங்கத்திற்கு இன்றியமையாதது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
எதிர்கால இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியானது விஞ்ஞான ரீதியான அடித்தளம், முறையான கொள்கைகள், தொழில்சார் திறன் மற்றும் தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் பயன்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.
இந் நிகழ்வில் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க, PAQS நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
(பிரதமர் ஊடகப் பிரிவு)








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()








