இந்தியக் கடற்படையின் அழைப்பின் பேரில், இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, தமது விஜயத்தை முடித்துக்கொண்டு 30.08.2026 அன்று நாடு திரும்பினார்.
ஓகஸ்ட் 27 ஆம் திகதி இந்தியாவின் புதுடெல்லியில் உள்ள South Block வளாகத்திலுள்ள இந்தியக் கடற்படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இலங்கைக் கடற்படைத் தளபதிக்கு, வெளிநாட்டு கடற்படைத் தளபதி ஒருவருக்கு வழங்கப்படும் மிகயுயர் பாரம்பரிய கடற்படை அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கைக் கடற்படைத் தளபதிக்கும் இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதனுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்காக இருநாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல், பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்துதல் மற்றும் திறன் விருத்தி திட்டங்களை விரிவாக்குதல் உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து இரு தரப்பினருக்கும் இடையே மூலோபாய மட்டத்திலான கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இலங்கைக் கடற்படை தளபதி, இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி (General N.S. Raja Subramani), இந்திய பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் சிங் மற்றும் இந்திய விமானப்படையின் துணைத் தளபதி ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் (Air Marshal Ashutosh Dixit) ஆகியோருடன் அதிகாரப்பூர்வ சந்திப்புகளிலும், இந்திய பாதுகாப்பு உற்பத்தித் துறையின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்களிலும் புதுடெல்லியில் பங்கேற்றார்.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டம், கூட்டு பயிற்சி திட்டங்கள் மற்றும் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் வான்வழி மற்றும் கடற்படை ஒத்துழைப்பு ஆகிய துறைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், இருநாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான பயிற்சித் துறையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவாக்கும் நோக்கில், இலங்கை கடற்படைத் தளபதி இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கொச்சி நகரில் உள்ள இந்தியக் கடற்படையின் தெற்கு கடற்படைக்கட்டளைத் தலைமையகத்தில், தெற்கு கடற்படைக்கட்டளை தளபதி வைஸ் அட்மிரல் சமீர் சக்சேனா (Vice Admiral Sameer Saxena) அவர்களை உத்தியோகபூர்வமாகச் சந்தித்தார்.
இதன்போது, இருநாடுகளின் கடற்படைகளுக்கும் இடையில் நிலவும் பயிற்சிப் பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் புதிய பயிற்சி வாய்ப்புகளை ஏற்படுத்துவது தொடர்பில் இதன்போது கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இலங்கைக் கடற்படைத் தளபதி ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் பற்றிய நீண்டகாலப் பயிற்சியைப் பூர்த்தி செய்த இந்திய கடற்படையின் INS Dronacharya பயிற்சிப் பள்ளிக்கு கண்காணிப்பு விஜயத்தைத் மேற்கெண்டதை தொடர்ந்து, கடற்படைத் தளபதியின் மூன்று (03) நாள் உத்தியோகபூர்வ இந்திய விஜயம் நிறைவடைந்தது.














இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










