மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே ஜே முரளிதரன் தலைமையில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் பணியாற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான ஒருங்கிணைப்புக் கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 19.12.2023 அன்று இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதிஸ்குமார் , பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயளார்கள், பிரதி மற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், வலய கல்வி அலுவலக உயர் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் யு.எஸ்.எம் ரிஸ்வி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நுண்நிதி ஒருங்கிணைப்பாளர் ஆர். சுதர்ஷன் என பலர் கலந்து கொண்டனர்.
அரச சார்பற்ற நிறுவனங்களின் திட்டங்கள் தொடர்பான அளிக்கைகள் முன்வைக்கப்பட்டதுடன் மாவட்டத்தின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு திட்டங்களை அமுல்ப்படுத்தி மாவட்டத்தில் புலப்படும் விதமான முன்னேற்றங்கள் ஏற்படுத்துமாறு அரச அதிபர் கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர் நிறுவனங்கள் தமது திட்ட வரைபுகளை மேற்கொள்ளும் போது தொடர்புடைய பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடி மாவட்டத்திற்கு தேவையான முதன்மையான விடயங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
இந் நிகழ்வில் மாவட்டத்தில் பணியாற்றும் 37 அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வரச சார்பற்ற நிறுவனங்களினால் போசாக்கின்மை, பாடசாலை இடை விலகல் போன்றவற்றைத் நிவர்த்தி செய்தல், இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனையை தடுத்தல், தொழில் பயிற்சி வழங்கி சுயதொழிலை ஊக்குவித்தல், இளைஞர்களை வேலை உலகிற்குள் கொண்டு செல்லல், வாழ்வாதார உதவி மற்றும், மாணவர்களுக்கான கற்றல் வசதிகளை வழங்குதல், வீட்டுத் தோட்ட செய்கைகளை. ஊக்குவித்தல், கால்நடைகளை வழங்கி வாழ்வாதாரத்தை உயர்த்துதல், விழிப்புணர்வு செயற்றிட்டங்கள் போன்ற பல அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇