அசர்பைஜானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்தார் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்!

அசர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்ற ஆசியாவில் பரஸ்பர நடவடிக்கை மற்றும் நம்பிக்கைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கான மாநாட்டின் (CICA) 7ஆவது அமர்வில் பங்கேற்ற வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், தனது இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளார்.

அசர்பைஜான் தலைமையில் ஒக்டோபர் 15ஆம் திகதி நடைபெற்ற இந்த உச்சிமாநாட்டில், ஆசிய பிராந்தியத்தின் இணைப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நிலையான வளர்ச்சியை வலுப்படுத்துவது தொடர்பாக 28 உறுப்பு நாடுகளின் அரச தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்றனர்.

“வலுவான CICA: ஆசியாவில் இணைப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நிலையான வளர்ச்சி” என்ற தொனிப்பொருளில் உரையாற்றிய அமைச்சர் விஜித்த ஹேரத், பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதில் டிஜிட்டல் மாற்றம் மற்றும் வலுவான கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மாநாட்டின் நிறைவில் ‘பாகு பிரகடனம்’ ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், லாவோஸ் CICA அமைப்பின் புதிய உறுப்பு நாடாக இணைத்துக்கொள்ளப்பட்டது. மேலும், அசர்பைஜானின் தலைமைத்துவம் 2026 முதல் 2028ஆம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டதுடன், சுல்தான் ஹாஜியேவ் CICA அமைப்பின் புதிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

விஜயத்தின்போது அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவை ‘சுகுல்பா’ அரண்மனையில் சந்தித்த அமைச்சர், இருதரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

மேலும், அசர்பைஜான், பஹ்ரைன், தஜிகிஸ்தான், துருக்கி மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் CICA பொதுச்செயலாளர் கெய்ரத் சரிபே ஆகியோருடனும் அமைச்சர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

அசர்பைஜானின் முன்னணி அரச எரிசக்தி நிறுவனமான SOCAR உடன் நடைபெற்ற உயர்மட்ட வர்த்தகச் சந்திப்பிலும் அமைச்சர் பங்கேற்றார். இதன்போது இலங்கையின் எரிசக்தித் துறையில் மூலோபாய முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்புகளை ஏற்படுத்துவது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தில் அசர்பைஜானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஃபஜீஹா அஸ்மி மற்றும் வெளிவிவகார அமைச்சின் தென்கிழக்காசிய மற்றும் மத்திய ஆசியப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சமரி ரோட்ரிகோ ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects