நாட்டின் பெரும்பாலான நகர்ப்புறங்களில் காற்றின் தரம் நடுத்தர மட்டத்தில் நிலவுவதுடன், யாழ்ப்பாணம், வவுனியா, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, புத்தளம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் பாதகமான நிலையில் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நிலவும் வானிலை நிலவரங்களைப் பொறுத்து, நாளை (31.10.2026) காலை வரை இலங்கை காற்றின் தரக் குறியீடு (SL AQI) 88 முதல் 120 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கமைய பெரும்பாலான நகர்ப்புறங்களில் காற்றின் தரம் மிதமான அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், யாழ்ப்பாணம், வவுனியா, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, புத்தளம், பதுளை மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் இது சற்றே பாதகமான நிலையில் நீடிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை நேர வானிலை அதிகாரி சஜித் விக்ரமசூரிய கருத்து தெரிவிக்கையில்,
தற்போது நாட்டில் நிலவும் காலநிலை மாற்றங்கள் மற்றும் இந்தியாவிலிருந்து வீசும் காற்றுச் சுழற்சிகள் காரணமாகவே இவ்வாறு காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
நிலவும் காலநிலைக்கு அமைவாக, மேலும், தினமும் காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், பிற்பகல் 4.00 மணி முதல் 5.00 மணி வரையிலும் உள்ள காலப்பகுதிகளிலேயே வளித் தரக் குறியீடானது உச்ச அளவுகளை எட்டக்கூடும் என்றார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()










