சிறுவர்களின் இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நலனுக்கான அமைச்சுகளுக்கிடையில் தேசிய வேலைத்திட்டம் குறித்த முதற்கட்டக் கலந்துரையாடல்!

சிறுவர்களின் இணையவழிப் (Online) பாதுகாப்பையும் டிஜிட்டல் நலனையும் உறுதிசெய்வதற்கான “தேசிய முன்னெடுப்பு” தொடர்பான முதற்கட்டக் கலந்துரையாடல், 02.11.2026 அன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.

இவ்விடயத்துக்கு அமைவாக, ஒருங்கிணைந்ததும் முறைசார்ந்ததுமான தேசியக் கட்டமைப்பொன்றைத் தயாரிக்கும் நோக்கில், இனங்காணப்பட்ட முக்கிய அமைச்சுகளின் பொறுப்புகளையும் எதிர்காலப் பங்களிப்புகளையும் மீளாய்வு செய்வதற்காக இம்முதற்கட்டக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இணையவழியில் சிறுவர்களுக்கு ஏற்படும் துஷ்பிரயோகங்கள், சைபர் துன்புறுத்தல்கள் மற்றும் பல்வேறு டிஜிட்டல் அச்சுறுத்தல்களிலிருந்து அவர்களைப் பாதுகாத்து, பாதுகாப்பான டிஜிட்டல் சூழலொன்றை உருவாக்குவதே இவ்வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

டிஜிட்டல் பொருளாதாரப் பிரதி அமைச்சர் இரங்க வீரரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்கள் அறிமுக உரையை நிகழ்த்தினார்.

அங்கு கருத்துத் தெரிவித்த அவர் பின்வருமாறு குறிப்பிட்டார்:

“டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியுடன் பிள்ளைகள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கின்றனர். அதனால், தனித்தனியாக மேற்கொள்ளப்படும் தலையீடுகளுக்கு அப்பால் சென்று, அரச நிறுவனங்கள், அறிஞர்கள், சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வலுவான தேசிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது அத்தியாவசியமானதாகும். எமது எதிர்கால நடவடிக்கைகளை மூன்று பிரதான கருப்பொருள்களின் கீழ் வகுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அவையாவன: வலுவூட்டல்; பாதுகாப்பு மற்றும் பொறுப்புக்கூறல் அடிப்படையிலான உருவாக்கம்; பாதுகாப்பு, துரித துலங்கல் மற்றும் கட்டுப்பாடு என்பனவாகும்.”

அங்கு கருத்துத் தெரிவித்த டிஜிட்டல் பொருளாதாரப் பிரதி அமைச்சர் இரங்க வீரரத்ன அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்:

“இவ்வருடம் நிறைவடைவதற்கு முன்னர் அனைத்து இரண்டாம் நிலைப் பாடசாலைகளுக்கும், அடுத்த வருடத்தில் ஆரம்பப் பாடசாலைகளுக்கும் இணைய வசதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிள்ளைகளுக்குத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் அதேவேளை, அவர்களுக்குப் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உறுதிசெய்வதும் கட்டாயப் பொறுப்பாகும். அத்துடன், தெற்காசிய நாடுகளை ஒன்றிணைத்து, இது தொடர்பில் பிராந்திய மற்றும் சர்வதேச மட்டத்திலான கொள்கை ரீதியான தலைமைத்துவத்தை வகிப்பதற்கும் இலங்கை எதிர்பார்க்கிறது.”

இக்கலந்துரையாடலில் உலக சுகாதார நிறுவனம் (WHO), யுனிசெஃப் (UNICEF) ஆகியவற்றின் பிரதிநிதிகள் தொழில்நுட்ப விளக்கக்காட்சிகளை முன்வைத்தனர். சமூக சுகாதார நிபுணரான வைத்தியர் ஆசிரி ஹேவாமலகே அவர்கள், சர்வதேசத் தரவுகள் மற்றும் சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட பல முக்கிய தகவல்களைச் சமர்ப்பித்தார்.

இதற்கு மேலதிகமாக, முழு அரசாங்க வேலைக் கட்டமைப்பையும் உள்ளடக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட பரந்த டிஜிட்டல் கட்டமைப்பு குறித்து ஆனந்த கலப்பத்தி அவர்கள் பங்கேற்றவர்களுக்கு விளக்கமளித்தார்.

டிஜிட்டல் பொருளாதாரம்; சுகாதாரம் மற்றும் ஊடகம், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி; மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள்; பாதுகாப்பு, பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு ஆகிய ஏழு அமைச்சுகளின் பிரதிநிதிகள், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தற்போதைய நிலைமை, சவால்கள் மற்றும் முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் குறித்துச் சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டக் கருத்துகளும் அவதானிப்புகளும் இங்கு கலந்துரையாடப்பட்டன. அதன் பின்னர், பிரதமரின் மேலதிகச் செயலாளர் ஏ.பி.எம். அஷ்ரஃப் அவர்கள், பிள்ளைகளின் இணையவழிப் (Online) பாதுகாப்பையும் டிஜிட்டல் நலனையும் உறுதிசெய்வதற்கான எதிர்கால வேலைத்திட்டம் மற்றும் கால அட்டவணை குறித்துத் தெளிவுபடுத்தினார்.

இந் நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி ஆகிய அமைச்சுகளின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects