தேசிய நீர்வாழ் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவரகத்தினால் (NARA) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘நாரா ஓப்பன் டே 2026’ (NARA OPEN DAY) கண்காட்சி இம் மாதம் 04ஆம் மற்றும் 05 ஆம் திகதிகளில் நடைபெறுகிறது.
“அறிவியலை மேம்படுத்துதல் மற்றும் நீர்வாழ் வளங்களை நிலைபேறான முறையில் பேணுதல்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியின் பிரதான நோக்கம், கடல்சார் அறிவியல் அறிவையும் நவீன கடற்றொழில் தொழில்நுட்பங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதாகும்.
கண்காட்சியின் முதல் நாளில் பாடசாலை மாணவர்கள் மற்றும் மீனவ மக்களுக்கான விசேட கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், இரண்டாம் நாள் வர்த்தகர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுக்கான கலந்துரையாடல் அமர்வுகளுக்கு ஒதுக்கப்பட்டது.
மேலும், பல்வேறு புதிய அம்சங்களைக் கொண்ட கண்காட்சிக் கூடங்கள், நவீன கடலுணவுப் பொருட்கள், மீன் சிகிச்சை (Fish Therapy) சேவைகள் மற்றும் புதிய மீன் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
கண்காட்சியின் இரண்டாம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,
கடற்றொழில் அமைச்சுக்கு புதிய சிந்தனைகளையும் புத்தாக்கங்களையும் கொண்டுவரும் பிரதான சக்தியாக நாரா நிறுவனம் விளங்குவதாகக் குறிப்பிட்டார்.
அதேவேளை, நாரா நிறுவனத்திடமிருந்து இதுவரை நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய சிறந்த சேவைகளும் அதிகபட்ச உற்பத்தித்திறனும் கிடைத்துள்ளனவா என்பது குறித்து அனைவரும் சுயவிமர்சனத்துடன் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் கடன் சுமையைக் குறைப்பதற்கும், முந்தைய அரசாங்கங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கும் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இத்துறையில் மேலும் முன்னேற வேண்டும் என வலியுறுத்தினார்.
எதிர்வரும் ஆண்டில் கடற்றொழில் அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்படும் நிதியில் திருத்தங்களை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், நாரா நிறுவன ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அத்துடன், இத்துறையின் வளர்ச்சிக்குத் தேவையான உண்மையான மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக நிறுவனத்துக்குத் தேவையான அனைத்து ஆதரவுகளும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
இந் நிகழ்வில் நாரா நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட கண்காட்சியைப் பார்வையிட வருகை தந்த பெருமளவான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









