இலங்கை விமானப்படையின் நேரடிப் பங்களிப்புடன் நவீனமயப்படுத்தப்பட்ட மாலபே, ‘வைத்தியர் நெவில் பெர்னாண்டோ நினைவு விமானப்படை வைத்தியசாலை’ 09.11.2026 அன்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் அழைப்பின் பேரில் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர், பயன்படுத்தப்படாத மற்றும் குறைந்தளவில் பயன்படுத்தப்படும் அரச சொத்துக்களைப் பொதுமக்களின் நலனுக்காக உச்சபட்சமாகப் பயன்படுத்தும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்திற்கு இந்த நடவடிக்கை சிறந்த முன்னுதாரணமாக அமைவதாகத் தெரிவித்தார்.
ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அநுர குமார திஸாநாயக்க மற்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் ஆகியோர் இணைந்து முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து இந்தப் புதிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2017ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட பின்னர் எட்டு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த தற்காலிக நிர்வாக முறைக்குப் பதிலாக, புதிய கலப்பு (Hybrid) செயற்பாட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் கீழ், வைத்தியசாலையின் உரிமை 100 சதவீதம் திறைசேரிக்குச் சொந்தமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அதன் அன்றாட செயற்பாடுகளுக்கான பொறுப்பு இலங்கை விமானப்படையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
விமானப்படையின் நிபுணத்துவம், தொழில்சார் தரநிலைகள் மற்றும் வினைத்திறனான நிர்வாகம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, விமானப்படை உறுப்பினர்கள், அவர்களது நெருங்கிய குடும்ப உறவினர்கள் மட்டுமன்றி பொதுமக்களுக்கும் உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
வைத்தியசாலையின் செயற்பாடுகள், பிரதம நிறைவேற்று அதிகாரி எயார் கொமடோர் நீலுகா அபேசேகர தலைமையிலான புதிய நிர்வாகத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.
விமானப்படை உறுப்பினர்களுக்கென தனியான வைத்தியசாலையொன்றின் தேவை நீண்டகாலமாகக் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இந்த நடவடிக்கையின் மூலம் விமானப்படைக்கென தனித்துவமான மருத்துவமனையொன்று கிடைத்திருப்பது முக்கியமான சாதனையாகும் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தின் மூலம், சுமார் 50 இலட்சம் மக்கள் வசிக்கும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில், குறிப்பாக கடுவெல, அத்துருகிரிய மற்றும் அவிசாவளை பகுதிகளில் நிலவும் மூன்றாம் நிலை சுகாதார சேவைகளுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதன் போது, நினைவுப் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு வைத்தியசாலை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகள் மருத்துவமனை வளாகத்தைப் பார்வையிட்டனர்.
இந் நிகழ்வில் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்த, எயார் ஃபோர்ஸ் மார்ஷல் ரொஷான் குணதிலக்க, மறைந்த வைத்தியர் நெவில் பெர்னாண்டோவின் மனைவி ஸ்வர்ணமாலி பெர்னாண்டோ, முன்னாள் விமானப்படைத் தளபதிகள், விமானப்படைத் தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர உள்ளிட்ட அதிகாரிகள், வைத்தியசாலைப் பணியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.








![]()









