இலங்கையில் வணிகப் பெயர்களைப் பதிவு செய்யும் செயல்முறையை எளிமைப்படுத்தி, வினைத்திறன் மிக்கதாகவும் இலகுவானதாகவும் மாற்றும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த வணிகப் பெயர் பதிவுத் திட்டத்தின் (Simplified and Unified Business Name Registration – BNR) முன்னோடித் திட்டம் 10.11.2026 அன்று அநுராதபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தலைமையில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு, Chrysalis நிறுவனம் மற்றும் மாகாண சபைகளின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் பிரதான நோக்கம், தனிநபர் மற்றும் பங்குடைமை வணிகங்களைப் பதிவு செய்யும் நடைமுறையை எளிமைப்படுத்தி, நாடளாவிய ரீதியில் ஒரே மாதிரியான முறையை அறிமுகப்படுத்துவதாகும்.
1918 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வந்த பழைய பதிவுமுறையில், காணி உரிமை தொடர்பான ஆவணங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் அனுமதிகளைப் பெறுதல் உள்ளிட்ட சிக்கலான தேவைகள் காணப்பட்டன.
புதிய சீர்திருத்தத்தின் ஊடாக வணிகப் பெயர் பதிவையும் ஏனைய சட்டரீதியான அனுமதிப்பத்திரங்களைப் பெறும் நடைமுறையையும் தனித்தனியாகப் பிரித்து, அடிப்படை அடையாள மற்றும் வதிவிடத் தகவல்களின் அடிப்படையில் ஐந்து நாட்கள் போன்ற குறுகிய காலத்திற்குள் பதிவை நிறைவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் தெரிவுசெய்யப்பட்ட 20 பிரதேச செயலகப் பிரிவுகளில் மூன்று மாத கால முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
முன்னோடித் திட்டத்தின் முன்னேற்றம் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், இப்புதிய நடைமுறையை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தவும், எதிர்காலத்தில் டிஜிட்டல் கட்டமைப்பின் ஊடாக இச்சேவையை மேலும் வினைத்திறன் மிக்கதாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய வணிகங்களை ஆரம்பிக்க எதிர்பார்ப்பவர்கள் மற்றும் சிறிய, நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் எதிர்கொள்ளும் நிர்வாக ரீதியான தடைகளைக் குறைத்து, முறைசார் பொருளாதாரத்தில் இலகுவாகப் பிரவேசிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே இச்சீர்திருத்தத்தின் பிரதான நோக்கமாகும்.
இந் நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் அனோஜா ஹேரத், தொழில்முயற்சி அபிவிருத்திப் பணிப்பாளர் சுசந்தி ஜயசிங்க, தொழில்முயற்சி அபிவிருத்திப் பணிப்பாளர் எவாஞ்சலின் சின் கிளேயர், Chrysalis நிறுவனத்தின் தலைமை அதிகாரி அஷிகா குணசேன, சிரேஷ்ட ஆலோசகர் பத்மசிறி குணவர்தன உள்ளிட்ட மாகாண மற்றும் பிரதேச நிர்வாக நிறுவனங்களின் செயலாளர்கள், அதிகாரிகள் மற்றும் திட்டத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()










