2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடுத்தர வருமானக் குடும்பங்களின் கொள்வனவு சக்தி வீழ்ச்சி – தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

இலங்கையில் 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களின் கொள்வனவு சக்தி 39.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஆரம்பகட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்ட திருத்தப்பட்ட குடும்ப வருமானம் மற்றும் செலவின ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2019ஆம் ஆண்டில் 53,333 ரூபாயாகக் காணப்பட்ட குடும்பங்களின் சராசரி அல்லாத இடைநிலை மாத வருமானம், 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 75,882 ரூபாயாக அதிகரித்துள்ளது.

எனினும், பணவீக்கத்தைக் கருத்திற்கொண்டு கணக்கிடும்போது, இந்த வருமானத்தின் உண்மையான பெறுமதி 39.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதேவேளை, சராசரி மாத குடும்ப வருமானம் 2019ஆம் ஆண்டில் 76,414 ரூபாயாகக் காணப்பட்ட நிலையில், 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 120,266 ரூபாயாக அதிகரித்துள்ளது. இருப்பினும், பணவீக்கத்தின் தாக்கத்தைக் கணக்கில் கொண்ட பின்னர் அதன் பெறுமதி 32.8 சதவீதத்தால் குறைந்துள்ளது.

மேலும், குடும்பங்களின் சராசரி மாதச் செலவினம் 2019ஆம் ஆண்டில் 63,130 ரூபாயாகக் காணப்பட்ட நிலையில், 2025ஆம் ஆண்டில் 116,191 ரூபாயாக அதிகரித்துள்ளது. எனினும், பணவீக்கத்தைக் கணக்கில் கொண்ட பின்னர் அதன் உண்மையான பெறுமதி சுமார் 21.4 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, நாட்டின் வறுமை நிலையும் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதன்படி, 2019ஆம் ஆண்டில் 14.3 சதவீதமாகக் காணப்பட்ட தேசிய வறுமை விகிதம், 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 16 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இதற்கமைய, சுமார் 34 இலட்சத்து 20 ஆயிரம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவருக்கான மாதாந்த வறுமைக் கோட்டு வருமானம் 2019ஆம் ஆண்டில் 6,966 ரூபாயாகக் காணப்பட்ட நிலையில், 2025ஆம் ஆண்டில் 16,417 ரூபாயாக அதிகரித்துள்ளது.

மேலும், செல்வந்த குடும்பங்களில் முதல் 20 சதவீதத்தினர் சராசரியாக மாதம் 335,679 ரூபாய் வருமானம் பெறும் நிலையில், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் கீழ் 20 சதவீதத்தினர் மாதம் 22,612 ரூபாய் மாத்திரமே பெறுவதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிராந்திய அடிப்படையில், பெருந்தோட்டப் பகுதிகளில் வறுமை விகிதம் 23 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 17.3 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 7.8 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.

கிராமப்புறங்களிலேயே அதிகளவானோர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வதாகவும், அந்த எண்ணிக்கை சுமார் 29 இலட்சத்து 30 ஆயிரம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் முன்னெடுக்கப்பட்ட முதலாவது குடும்ப வருமானம் மற்றும் செலவின ஆய்வின் ஆரம்பகட்ட முடிவுகளே இவை எனவும், முழுமையான தரவுகளைச் சரிபார்த்த பின்னர் இறுதி முடிவுகள் வெளியிடப்படும் எனவும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects