பிரான்ஸில் உள்ள மிக உயரமான மலையான ”மௌண்ட் பிளங்” (Mont Blanc) கடந்த இரண்டு ஆண்டுகளில் 2.22 மீட்டர் சுருங்கிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது இரண்டு ஆண்டுகளுக்க முன்னர் 4807.81 மீற்றர் உயரமாகக் காணப்பட்ட இம்மலையின் உயரம் இவ்வாண்டு 4,805.59 மீ ஆக அளவிடப்பட்டுள்ளது, இது 2021 இல் இருந்ததை விட 2.22 மீ குறைவாக உள்ளது.
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை கண்காணிக்க தென்கிழக்கு பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலை ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் அளவிடப்படுகிறது. ஆல்ப்ஸ் மலைத்தெடரில் அமைந்துள்ள இவ் பிளங் மலையின் உயரம் குறைவடைந்தமைக்கான காரணம் கோடைகாலத்தில் மழைவீழ்ச்சி குறைந்தமையாக இருக்கலாம் என சிரேஸ்ட வடிவியல் (Geometry) துறை நிபுணர் ஜீன் டெஸ் கேரெட்ஸ் கூறினார்.
மௌன்ட் பிளாங்கின் பாறைச் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 4,792 மீ உயரத்தில் உள்ளது. ஆனாலும் அதன்மீது படிந்துள்ள பனியின் காரணமாக அதன் உயரத்தில் ஆண்டு தோறும் மாறுபாடுகள் தோன்றுகின்றன. அங்குள்ள பனியின் அளவு மற்றும் காற்று என்பவற்றுடன் இந்த ஆண்டு “குறைந்த மழைப்பொழிவு” போன்ற காரணங்களினால் இந்த சுருக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த மலை மட்டுமல்லாது கடந்த வாரம் சுவிட்சர்லாந்தில் உள்ள பனிப்பாறைகள் அவற்றின் இரண்டாவது பெரிய வருடாந்திர இழப்பை சந்தித்துள்ளன என்று தெரியவந்தது – இது புவி வெப்பமடைதலின் தெளிவான அறிகுறி என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சலாந்து ஆகியவற்றை இணைத்ததாக அமைந்துள்ள இந்த மலை சுற்றுலாத்துறைக்கும் புகழ்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.