இந்து சமுத்திர வலய நாடுகளின் பிரதிநிதிகள் மாநாடு நாளை மறுதினம் முதல் இலங்கையில் இடம்பெறவுள்ளது. இந்து சமுத்திர வலய நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் 23 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு குறித்த மாநாட்டின் தலைவராகப் பொறுப்பேற்ற பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர், 2023ஆம் ஆண்டு முதல் அடுத்த 2 வருடங்களுக்கு இலங்கைக்கு தலைமைப் பதவியை வழங்கவுள்ளார். இலங்கையினால் நடத்தப்படும் இந்த மாநாட்டிற்கு முன்னதாக, இந்தியப் பெருங்கடல் வட்டாரத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இன்றும் நாளையும் கூடவுள்ளது. வர்த்தகம் மற்றும் முதலீடு கடல்வள பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்றொழில் முகாமைத்துவம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நீலப் பொருளாதாரம் உள்ளிட்ட 6 முக்கியமான பகுதிகள் தொடர்பில் இந்த மாநாட்டில் ஆராயப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் அப்துல் மொமன், ஈரான், மலேசியா, தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இன்றும் நாளையும் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.அத்துடன், இந்து சமுத்திர வலய நாடுகளின் பிரதிநிதிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி சல்மான் அல் ஃபரிசி மற்றும் மொரிஷியஸில் உள்ள இந்து சமுத்திர வலய நாடுகள் சங்க செயலகத்தின் பணிப்பாளர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். நாட்டுக்கு விஜயம் செய்யும் அமைச்சர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளதுடன், இலங்கையில் தங்கியிருக்கும் போது, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஏனைய அமைச்சர்களுடனும் இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளனர்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇