ஸ்பெய்ன் தேசத்தின் பில்பாஓ நகரில் அமைந்துள்ள விளையாட்டரங்கில் நடைபெற்ற 19ஆவது ரீயூனியன் சர்வதேச மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின் தருஷி கருணாராட்ன, காலிங்க குமாரகே ஆகிய இருவரும் தத்தமது நிகழ்ச்சிகளில் முறையே 2ஆம் இடத்தையும் 3ஆம் இடத்தையும் பெற்றனர்.
பெண்களுக்கான தரம் ஏ 600 மீற்றர் ஓட்டப் போட்டியை ஒரு நிமிடம் 24.84 செக்கன்களில் நிறைவு செய்த தருஷி கருணாரட்ன ஆசிய கண்ட சாதனையுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றார். முந்தைய ஆசிய கண்ட சாதனை ஒரு நிமிடம் 28.06 செக்கன்களாகும். ஜப்பானின் அயானோ ஷோமி 2022இல் ஏற்படுத்திய சாதனையையே தருஷி இன்று முறியடித்து புதிய ஆசிய கண்ட சாதனையை நிலைநாட்டினார்.
சர்வதேச மெய்வல்லுநர் போட்டி ஒன்றில் 600 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் தருஷி கருணாரட்ன பங்குபற்றியது இதுவே முதல் தடவையாகும்.
அப் போட்டியில் அவுஸ்திரேலியாவின் பெண்டியர் ஒபோயா (1:24.53) முதலாம் இடத்தையும் பிரேஸிலின் ஃப்ளாவியா மரியா டி லீமா (1:25.34) மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
காலிங்க குமாரகே 3ஆம் இடம்
ஆண்களுக்கான தரம் ஏ 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 45.91 செக்கன்களில் நிறைவு செய்த காலிங்க குமாரகே 3ஆம் இடத்தைப் பெற்றார்.
பொட்ஸ்வானாவின் பூசாங் கொலின் கெபினட்ஷிப் (45.47 செக்) முதலாம் இடத்தையும் கியூபாவின் யொவாண்டிஸ் லெஸ்கே (45.71 செக்.) இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇