மாரடைப்பை கண்டறிந்து உறுதிப்படுத்தும் நவீன பரிசோதனை…..
ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு ‘கோல்டன் ஹவர்ஸ்’ எனப்படும் தற்காப்பு நேரத்திற்குள் அருகில் இருக்கும் இதய சிகிச்சை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டால் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு ஏற்பட்டிருக்கும் மாரடைப்பு பாதிப்பின் வீரியத்தையும், அடர்த்தியையும் துல்லியமாக அவதானிப்பதற்காக பரிசோதனைகளை மேற்கொள்வர். அதில் டிரப்போனின் டி மற்றும் டிரப்போனின் ஐ எனப்படும் பரிசோதனைகளை உடனடியாக மேற்கொள்வர்.
இந்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் நோயாளிகளுக்கு ஓஞ்சியோகிராம் செய்து மாரடைப்பு பாதிப்பை சீராக்குவர். இத்தகைய பரிசோதனையின் போது மாரடைப்பு ஏற்பட்டதற்கான இதய தசை சேதத்தை அல்லது இதய தசை பாதிப்பை அளவிடுவர். இதயத்தில் உள்ள தசைகளில் ட்ரப்போனின் எனப்படும் புரத சத்து உள்ளது.
தசைகள் பலவீனம், காயம் அல்லது வேறு ஏதேனும் பாதிப்பால் சேதம் அடைந்தால் அதில் உள்ள டிரப்போனின் எனப்படும் புரத சத்து கசிந்து குருதியில் கலந்து விடும். குருதி பரிசோதனையின் போது இதன் அளவை துல்லியமாக அவதானிப்பர். இத்தகைய சேதமடைந்த புரதச்சத்து இரண்டு வார காலத்திற்குப் பிறகு இயல்பான நிலையை அடையும்.
ஆனால் அதற்குள் பாரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதால் இத்தகைய பரிசோதனை அவசியம் மற்றும் அவசரம் என வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
சிலருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டவுடன் இத்தகைய பரிசோதனையை மேற்கொள்ள பரிந்துரைப்பர். அந்த பரிசோதனை முடிவுகள் டிரப்போனின் டீ மற்றும் ஐ ஆகிய அவற்றின் அளவுகள் இயல்பாக இருந்தாலும் கூடுதலாக மூன்று மணி நேரம் கழித்து மீண்டும் ஒருமுறை இத்தகைய பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என வைத்திய நிபுணர்கள் வலியுறுத்துவர். அந்த பரிசோதனையின் போதும் ட்ரப்போனின் எனும் புரத சத்தின் அளவு இயல்பாக இருந்தால் உங்களுக்கு மாரடைப்புக்கான சிகிச்சை வேறுபட்டதாக இருக்கும்.
மேலும், தற்போது ஹை சென்சிடிவிடி டிரப்போனின் டெஸ்ட் எனப் பரிசோதனை அறிமுகமாகியிருக்கிறது. இவை பாதிப்பை துல்லியமாக அவதானிப்பதால் நோயாளிகளுக்கு எளிதாக சிகிச்சை அளித்து, அவர்களை மாரடைப்பு பாதிப்பிலிருந்து முழுமையாக நிவாரணம் அளிக்க இயலுகிறது. இதனைத் தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிக்கு முழுமையான நிவாரண சிகிச்சை வழங்கப்படுகிறது.
அத்துடன் இதய பாதிப்பு குறித்த விழிப்புணர்வை பெறும் வகையில் வைத்திய நிபுணர்கள் சில எச்சரிக்கையான அறிகுறிகளையும் நோயாளிகளுக்கு எடுத்துரைப்பர். அந்த அறிவுரையை உறுதியாக பின்பற்றினால் மீண்டும் மாரடைப்பு பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள இயலும்.
வைத்தியர் அருணாச்சலம்
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇