புதிய ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

செவ்வாய் கிரகத்தின் வெளிப்புற கிரஸ்ட்டில் இருக்கும் பாறைகளின் ஆழத்தில் திரவ வடிவில் நீர் இருப்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

செவ்வாயின் துருவங்களில் உறைந்த நீர் மற்றும் வளிமண்டலத்தில் நீராவிக்கான சான்றுகள் இருப்பதை பற்றி விஞ்ஞானிகள் நீண்ட காலமாக அறிந்திருந்தாலும், கிரகத்தில் திரவ வடிவிலான நீரை அவர்கள் கண்டுபிடித்தது இதுவே முதல் முறை.

நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ் (PNAS) இதழில், கடந்த வாரம் ‘Liquid water in the Martian mid-crust’ என்ற ஆய்வு வெளியிடப்பட்டது. கலிபோர்னியா சான் டியாகோ பல்கலைக்கழகத்தின் வாஷன் ரைட், மத்தியாஸ் மோர்ஸ்ஃபெல்ட் மற்றும் மைக்கேல் மங்கா ஆகியோரால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த கண்டுபிடிப்புகள் செவ்வாய் கிரகத்தின் நீர் சுழற்சியை நன்கு புரிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு உதவக்கூடும், இது கிரகத்தின் காலநிலை, மேற்பரப்பு மற்றும் உட்புறத்தின் பரிணாம வளர்ச்சி தொடர்பான கேள்விகளைத் திறக்கும். மேலும் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரங்களைத் தேடுவதற்கும் இந்த கண்டுபிடிப்பு உத்வேகம் அளிக்கும்.

இந்த ஆய்வு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது மற்றும் அதன் முடிவுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

ஆய்வு எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது?

தங்கள் ஆய்வுக்காக, ஆராய்ச்சியாளர்கள் நாசாவின் மார்ஸ் இன்சைட் லேண்டரின் (Mars Insight Lander) தரவைப் பயன்படுத்தினர், இந்த லேண்டர் 2018 இல் கிரகத்தை அடைந்து டிசம்பர் 2022 இல் ஓய்வு பெற்றது. நிலநடுக்கமானி (Seismometer) பொருத்தப்பட்டிருந்த இந்த லேண்டர், நான்கு ஆண்டுகளாக நிலநடுக்கங்கள் மற்றும் விண்கல் தாக்கங்களால் உருவாக்கப்பட்ட கிரகத்தின் அதிர்வுகளை பதிவு செய்து கொண்டிருந்தது.

மொத்தத்தில் நான்கு வருடங்களில், விண்கலத்தில் இருந்த கருவியில், சுமார் 1,319 க்கும் மேற்பட்ட நிலஅதிர்வுகள் பதிவாகி இருந்தன.

இந்த நில அதிர்வு அலைகள் எவ்வளவு வேகமாகப் பயணித்துள்ளன என்பதை அளப்பதன் மூலம், அவை எந்தப் பொருளின் ஊடாகச் செல்லும் வாய்ப்பு அதிகம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் தீர்மானிக்க முடிந்தது.

பூமியில் நம் நிலப்பரப்புகளில் தண்ணீர் அல்லது எண்ணெய் மற்றும் எரிவாயுவின் இருப்பைத் தேடுவதற்கு பயன்படுத்தும் geophysical model identical நுட்பம் தான் இது, என்று ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர் மைக்கேல் மங்கா விளக்கினார்.

இதன்மூலம் செவ்வாய் கிரகத்தில் இன்சைட் மூலம் சேகரிக்கப்பட்ட தரவை பகுப்பாய்வு செய்ததில், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பிற்கு கீழே, கிரானைட் போன்ற உடைந்த பாறையின் (fractured igneous rock) அடுக்குகளின் உள்ள விரிசல்கள் திரவ நீரால் நிரப்பப்பட்டு இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தின் அப்பர் கிரஸ்டில் சுமார் 10 முதல் 20 கிமீ ஆழத்தில் அந்த அடுக்கு அமைந்துள்ளது. பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் ஆறுகள், ஏரிகள் மற்றும் பெருங்கடல்களைக் கொண்டிருந்தபோது நீர் மேற்பரப்பில் இருந்து வெளியேறியிருக்கலாம் என்று ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வின் இணை ஆசிரியரான வாஷன் ரைட் தி கார்டியனிடம் பேசுகையில், பூமியில், நிலத்தடி நீர் மேற்பரப்பில் இருந்து ஊடுருவியது, மேலும் இந்த செயல்முறை செவ்வாய் கிரகத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்… அப்பர் கிரஸ்ட் இன்று இருப்பதை விட வெப்பமாக இருந்த காலத்தில் இந்த ஊடுருவல் நடந்திருக்க வேண்டும்.

இன்சைட் லேண்டர் இருப்பிடத்தில் உள்ள அளவீடுகள் முழு கிரகத்திலும் இருந்தால், பாறை முறிவுகளில் சிக்கியுள்ள நீரின் அளவு, செவ்வாய் கிரகத்தில் 1-2 கிமீ ஆழமுள்ள கடலை நிரப்பும், என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இந்த கண்டுபிடிப்பு செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கான பகுதிகளை தேடுவதற்கான மற்றொரு இலக்குக்கு வழிக்காட்டியுள்ளது.

திரவ வடிவிலான நீர் இல்லாவிட்டால் நீங்கள் உயிர் வாழும் வாய்ப்பு இல்லை, எனவே செவ்வாய் கிரகத்தில் வாழக்கூடிய சூழல்கள் இருக்கும் என்றால், அது இப்போது நிலப்பரப்பின் ஆழமான பகுதியில் தான் சாத்தியம், என்று பேராசிரியர் மங்கா விளக்கினார்.

எவ்வாறாயினும், செவ்வாய் கிரகத்தை காலனித்துவப்படுத்த திட்டமிட்டுள்ள எலோன் மஸ்க் போன்ற கோடீஸ்வரர்களுக்கு இந்த கண்டுபிடிப்பு நல்ல செய்தி அல்ல. செவ்வாய் கிரகத்தில் 10-20 கி.மீ ஆழத்தில் துளையிட்டு தண்ணீரை எடுப்பது கடினமான பணியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects