கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அமரர் ஜீவம் ஜோசப் ஞாபகார்த்த நினைவுப் பேருரை – தொடர் – 08 எனும் நிகழ்வானது 27.04.2025 அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் என்.தனஞ்செயன், ஏனைய அதிதிகளாக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளரும் பேராசிரியையுமான புளோரன்ஸ் பாரதி கென்னடி, மட்டக்களப்பு வலயக்கல்வித் திணைக்களத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் அழகையா ஜெகநாதன் ஆகியோரும், நினைவு கூரப்பட்ட கலைஞர் அமரர் ஜீவம் யோசப்பின் மனைவி யாழினி ஜீவம் ஜோசப், அவரது மகன் எமில் பிரியானந்த் உட்பட உறவினர்கள், கலைஞர்கள், கலாசாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் தலைமை உரை மற்றும் நினைவுப் பேருரையாளரைப்பற்றிய அறிமுக உரையை பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரும் தொடர்ந்து நினைவுகூரப்பட்ட கலைஞர் ஜீவம் ஜோசப் அவர்களைப்பற்றிய அறிமுக உரையை உதவிக்கல்விப் பணிப்பாளரும் ஆற்றினர்.
குறித்த நினைவுப் பேருரையானது “மனிதத்தின் இசை – மண்ணின் இசை, மாற்றத்தை நோக்கிய பார்வை” எனும் தலைப்பில் பேராசிரியை புளோரன்ஸ் பாரதி கென்னடியினால் ஆற்றப்பட்டது.
இந்நிகழ்வில், ஆசிரியப் பணி, இசைப் பணி, ஆன்மீகப் பணி மற்றும் சிற்பக்கலைஞர் எனப் பல பரிமாணங்களில் அமரர் ஜீவம் ஜோசப் நினைவு கூரப்பட்டார்.
16 வகையான வாத்தியக் கருவிகளை துல்லியமாக இசைக்கும் திறமை வாய்ந்தவராகவும், பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும், பாடகராகவும் திகழ்ந்த அமரர் ஜீவம் ஜோசப், 1966 ஆம் ஆண்டில் இசையமைத்து அவரது சகோதரரும் தாவரவியல் ஆசிரியருமான குணம் சவரிராஜா பாடிய “மீன் மகள் பாடுகிறாள்” எனும் காலத்தால் அழியாத பாடலை சந்தசேனா சாகித்யா எனும் மாணவி பாடினார்.
மேலும் இப்பாடலானது 2024 ஆம் ஆண்டு Visual Art Movies நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட “போடியார்” எனும் ஈழத்துத் திரைப்படத்தில் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டு பெருமைப்படுத்தப் பட்டுள்ளது என்பதையும் பேராசிரியை புளோரன்ஸ் பாரதி கென்னடி தமதுரையில் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இவ்வாறான பத்திற்கும் மேற்பட்ட கலைஞர்களின் நினைவுப் பேருரை நிகழ்வுகள் நடாத்தப்படவுள்ளதாகவும், பின்னர் அவை ஒரு நூலாகத் தொகுக்கப்படும் எனவும் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் அமரர் ஜீவம் ஜோசப்பின் மனைவி மற்றும் மகனிடம் நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










