கிழக்கு மாகாணத்தை வலுப்படுத்துவதனூடாக சாத்தியமான பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்துவது தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துனித்தி தலைமையில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்ணசேகர மற்றும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மிமான
மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுகள் நாட்டிற்கான உலக வங்கியின் முகாமையாளர் ஜிவேர்ஜ் சார்கசியன் (Gevorg Sargsyan) ஆகியோரின் பங்குபற்றுதலுடன்புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (30.07.2025) இடம் பெற்றது.
இதன் போது உலக வங்கியின் நிதி உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யபட்ட ஏழு பிரதேசங்களை அபிவிருத்தி செய்தல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இவ் அபிவிருத்தி வேலைத்திட்டத்தினூடாக மீன்பிடி, பெறுமதி சேர் விவசாய பொருட்களை உற்பத்தி செய்தல், சுற்றுலாத்துறையை மேற்படுத்தல், தனியார் தொழில் வாய்ப்பை ஏற்படுத்தல், வறுமை ஒழிப்பு போன்ற மேலும் பல விடயங்களை மையப்படுத்தியதாக குறித்த வேலைத்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் உள்ளூர் விமான சேவைகளை ஆரம்பித்தலினூடாக சுற்றுலா துறையை மேம்படுத்தல் தொடர்பாகவும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, திணைக்கள தலைவர்கள், உலக வங்கியின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், துறைசார் நிபுணர்கள், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் திருகோணமலை மாவட்ட நிலாவெளி பிரதேசத்தில் சுற்றுலா துறை வலயத்தை மேம்படுத்தல் இப்பிரதேசத்தில் குடிநீர் வழங்கள், மீன்பிடி துறைமுகத்தை அபிவிருத்தி செய்தல், கந்தளாய் பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பை அபிவிருத்தி செய்வதற்கான செயற்திட்டம் உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் புராதன ஒல்லாந்தர் கோட்டையை புனர்நிர்மானம் செய்தல், நகரை அழகுபடுத்தல், நகரை அண்டிய புதிய பாலங்களை அமைத்தல், பாசிக்குடா கடற்கரையை அபிவிருத்தி செய்தல் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் அருகம்பை கடற்கரையை நீலக் கடற்கரையாக மாற்றுவதுடன் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் அபிவிருத்தி செய்தல், கல்முனை சந்தை மற்றும் பிரதேசத்தை அழகுபடுத்தல், பானம பிரதேசத்தையும் அபிவிருத்தி செய்தல், பொத்துவில் பேருந்து நிலையத்தை மேம்படுத்தல் மற்றும் குடிநீர் வழங்கள் செயற்றிட்டங்களை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக இதன் போது தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.












இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









