இலங்கையின் தனியார் துறை ஊழியர்களுக்கான தேசிய குறைந்தபட்ச வேதனத்தை உயர்த்துவதற்குத் தொழிலாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த புதிய வேதன உயர்வு 2026 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மாதந்த குறைந்தபட்ச வேதனம் 27,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளாந்த குறைந்தபட்ச ஊதியம் 1,080 ரூபாவிலிருந்து 1,200 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வேதன உயர்வு, 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச ஊதியத் திருத்தச் சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
அத்துடன் தொழிலாளர் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டி.என்.கே.வட்டலியத்த வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அனைத்து முதலாளிமார்களும் இந்த ஊதியத்தை வழங்குவதற்கு சட்ட ரீதியாகக் கடமைப்பட்டுள்ளனர்.
திருத்தப்பட்ட சட்டத்தின் பிரிவு 4 இன் படி, பாதீட்டு நிவாரண கொடுப்பனவுகளைத் தவிர, மார்ச் 31, 2025 வரை ஒரு தொழிலாளி பெற்ற வேறு எந்த கொடுப்பனவும் குறைந்தபட்ச வேதனத்தில் கணக்கிடப்படக் கூடாது.
இந்தச் சம்பள அதிகரிப்பிற்கு அமைய ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF), மேலதிக நேரம் (Overtime), பணிக்கொடை (Gratuity), மகப்பேற்று நன்மைகள் மற்றும் விடுமுறைத் தினக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட அனைத்துச் சட்டப்பூர்வ கொடுப்பனவுகளுக்கும் இதனைப் பிரயோகிக்கும் பொறுப்பு தொழில் வழங்குநர்களுக்கு உரித்தாகும்.
ஏதேனும் ஒரு வகையில், உரிய முறையில் கொடுப்பனவுகளை மேற்கொள்ளாத தொழில் வழங்குநர்கள் இருப்பின், அது தொடர்பான முறைப்பாடுகளை cms.labourdept.gov.lk ஊடாக தொழில் திணைக்களத்தின் முறைப்பாட்டு முகாமைத்துவக் கட்டமைப்பில் பதிவிடலாம் அல்லது அருகில் உள்ள தொழில் அலுவலகத்தில் எழுத்துமூலம் சமர்ப்பிக்க முடியும்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










