பெண்களை தொழில் முயற்சியாளர்களாக உருவாக்கும் சமூக மட்ட தொழில்துறைசார் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட யுவதிகளுக்கும் பெண்களுக்கும் பயிற்சிகளும் வழங்கப்பட்டுவருவதாக அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் அனுலாஅன்ரன் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் முறைசாரா வாழ்நாள் கல்விக்கூடாக பெண்களைத் தொழில் முயற்சியாளர்களாக உருவாக்கும் வேலைத் திட்டத்தின் ஒரு அங்கமாக மட்டக்களப்பிலிருந்து அம்பாறை மாவட்டத்திற்கான சமூக மட்ட தொழில்துறைசார் கற்றல் விஜயம் ஒன்று அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் அனுலாஅன்ரன்னின் தலைமையில் 27.11.2023 அன்று இடம்பெற்றது.
இவ் விஜயத்தில் மினி ஆடை உற்பத்தித் தொழில்துறைக்காக மட்டக்களப்பு – வவுணதீவுப் பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 20 யுவதிகளும் பெண்களும் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர் .
அம்பாறை மாவட்டத்திலுள்ள பல்வகை சமூக மட்ட ஆடை உற்பத்தி நிலைங்களுக்குச் சென்று அங்கு உற்பத்திகளையும் செய்முறை நுணுக்கங்களையும் பார்வையிட்டதுடன் தொழில் முயற்சியாண்மை வாய்ப்புக்களையும் இதன் மூலம் அறிந்து கொள்ள முடிந்ததாக கற்றல் விஜயத்தை மேற்கொண்ட பெண் தொழில் முயற்சியாளர்கள் தெரிவித்தனர்.
ஜேர்மன் நாட்டின் தன்னார்வ நிதி வழங்கும் நிறுவனமான சர்வதேச டிவிவி நிறுவனத்தின் நிதி அனுசரணையில் வவுணதீவுப் பிரதேசத்திலுள்ள பெண்களைக் கொண்டு ஆடை உற்பத்திகான இளையோர் ஆற்றல் அபிவிருத்தி தொழில் வள சமூக மட்ட மினி ஆடையுற்பத்தித் தொழிலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அங்கு ஆடை உற்பத்தி பயிற்சியில் ஈடுபடும் யுவதிகளுக்கும் பெண்களுக்கும் பரீட்சார்த்த செயற்திட்டக் காலத்தில் மாதாந்த உதவு ஊக்கக் கொடுப்பனவும் உள்ளீடுகளும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇