இந்தியக் கடற்படையின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றான ‘ஐ.என்.எஸ் தரங்கினி’ பாய்மரக்கப்பல், தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று (06.03.2026) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்திய – இலங்கை கடற்படைகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கோடும், இரு நாட்டு கடற்படை அதிகாரிகளுக்கும் இடையிலான பயிற்சிப் பரிமாற்றங்களை மேம்படுத்தும் நல்லெண்ண அடிப்படையிலான இந்த விஜயம் அமைந்துள்ளது.
திருகோணமலை துறைமுகத்தில் கடந்த 27 ஆம் திகதி முதல் மார்ச் 02 வரையிலான தனது முதற்கட்ட விஜயத்தை மேற்கொண்டு, அங்கிருந்து இலங்கை கடற்படை வீரர்களுக்கான கடல்வழிப் பயிற்சியுடன் மார்ச் 06 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தது.
இந்த ‘ஐ.என்.எஸ் தரங்கினி’ பாய்மரக் கப்பாலானது எதிர்வரும் 09 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும்.
“எப்போதும் உற்சாகத்துடன்” (Always Spirited) என்ற தாரக மந்திரத்தைக் கொண்ட இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ் தரங்கினி, 1997 ஆம் ஆண்டு கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. இக்கப்பல் கடந்த 28 ஆண்டுகளாக கடற்படை வீரர்களுக்குச் சிறந்த பயிற்சித் தளமாக விளங்கி வருகிறது.
இக்கப்பல் ஏனைய நவீன போர்க்கப்பல்களைப் போலன்றி, முழுமையாக பாய்மரங்களின் உதவியுடன் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 10,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட பாய்மரங்கள் காற்றைப் பிடித்து கப்பலை முன்னோக்கிச் செலுத்துகின்றன.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கப்பலின் அதிகாரிகள்:
“இயற்கை நம்மை எப்படிக் கட்டுப்படுத்துகிறது என்பதையும், அந்தச் சூழலுக்கு ஏற்ப நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் பயிற்சி வீரர்களுக்குக் கற்பிப்பதே எமது முக்கிய நோக்கம். நவீன தொழில்நுட்பங்களான தானியங்கி வழிசெலுத்தி கருவி (Autopilot) அல்லது நிலைப்படுத்தல் கருவி (Stabilizers) ஏதுமின்றி, கைகளால் நேரடியாகக் கப்பலை இயக்கும் சவாலான பயிற்சியை இங்கே வழங்குகிறோம்.”
நவீன மின்னணு வசதிகள் இன்றி, இன்றும் பாரம்பரியமான மரத்தாலான ‘சுக்கான்’ (Wheel) மூலமே இக்கப்பல் செலுத்தப்படுகிறது. இந்தச் சக்கரத்தைக் கையாண்டு கப்பலை வழிநடத்தும் மாலுமி ‘குவார்ட்டர் மாஸ்டர்’ (Quartermaster) என்று அழைக்கப்படுகிறார்.
அத்துடன், கப்பலின் ஒவ்வொரு பாய்மரத்தையும் இயக்குவதற்கு நூற்றுக்கணக்கான கயிறுகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு வரிசையில் உள்ள கயிறுகள் மட்டுமே சுமார் 20 மீட்டர் நீளம் கொண்டவை. பாய்மரங்களை விரிப்பதற்கும் மடிப்பதற்கும் தனித்தனியாகக் கயிறுகள் பயன்படுத்தப்படுவதுடன், ஒவ்வொரு கயிறும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகச் செயல்படுகிறது.
கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி திருகோணமலைக்கு வருகை தந்த இக்கப்பல், மார்ச் 2 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருந்தது.
அங்கிருந்து கொழும்பு நோக்கிய 4 நாள் கடல் பயணத்தின் போது, இலங்கை கடற்படையின் உயர் அதிகாரிப் பயிற்சி மாணவர்கள் மற்றும் கடற்படைப் பயிற்சி மாணவர்களுக்கும் விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டன.
பாய்மரங்களை அமைத்தல் (Sail Setting)
பாய்மரக் கம்பங்களில் ஏறுதல் (Manning the Mast)
கடலில் கண்காணிப்புப் பணிகள் (Lookout Duties)
எஞ்சின் அறை பராமரிப்பு (Engine Room Watchkeeping)
போன்ற நுணுக்கமான பயிற்சிகள் இலங்கைப் படையினருக்கு வழங்கப்பட்டதாகக் கப்பலின் பயிற்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இக்கப்பல் மூன்று பிரதான பாய்மரக் கம்பங்களைக் கொண்டது. அவை முறையே முன் பாய்மரக் கம்பம், முதன்மை பாய்மரக் கம்பம் மற்றும் பின்புற பாய்மரக் கம்பம் என அழைக்கப்படுகின்றன. இதில் பின்புறக் கம்பத்தில் உள்ள விசேட பாய்மரங்கள் ‘ஸ்பான்கர்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றன.
பிரபலமான ஸ்காட்டிஷ் வடிவமைப்பாளரால் உருவாக்கப்பட்ட இக்கப்பல், 2003-2004 காலப்பகுதியில் உலகத்தையே ஒருமுறை சுற்றி வந்து “உலகைச் சுற்றி வந்த சாதனை ” (Circumnavigation) சாதனை படைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கப்பலில் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து விளக்கமளித்த முதன்மை சீமான்ஷிப் பயிற்றுவிப்பாளர் (Seamanship Instructor) அமித் குமார் சிங், வீரர்களின் பாதுகாப்பிற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் குறித்து விவரித்தார்:
“பயிற்சிப் பெறுபவர்களின் பாதுகாப்பே எமது முக்கிய நோக்கம். ‘தவழ்ந்து, நடந்து, பின் ஓடுதல்’ என்ற படிமுறைப் பயிற்சியையே நாங்கள் பின்பற்றுகிறோம். அதாவது முதலில் கோட்பாட்டு ரீதியாகவும், பின்னர் நடைமுறை ரீதியாகவும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.”
பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்கள் என நான்கு புள்ளிகளையும் கம்பத்தில் நிலையாகப் பதித்து ஏறும் இந்த விசேட முறை, விபத்துக்களைத் தவிர்க்கப் பெரிதும் உதவுகிறது.
இதில் வீரர்கள் பாதுகாப்பு கவசங்களை அணிந்து, ஒவ்வொரு அடியிலும் கொக்கிகளை மாட்டி மிகுந்த பாதுகாப்புடன் ஏறுகின்றனர். தினமும் காலையில் மஸ்ட் ட்ரில் எனப்படும் இந்தப் பயிற்சி வழங்கப்படுவதன் மூலம், வீரர்கள் உயரமான பகுதிகளில் அச்சமின்றிச் செயல்படப் பழகுகின்றனர்.
நவீன வசதிகள் ஏதுமின்றி இயற்கைக் காற்றை மட்டுமே நம்பி இயங்கும் இக்கப்பல், பல நேரங்களில் சவால்களை எதிர்கொள்கிறது. திருகோணமலையிலிருந்து கொழும்பு வரும் வழியில் காற்றின் வேகம் மிகக் குறைவாக இருந்ததால், கப்பல் மிக மெதுவாகவே நகர்ந்துள்ளது.
கப்பலின் நீளம்: 55 மீட்டர்கள்
அகலம்: 8.5 மீட்டர்கள்
வேகம்: காற்று குறைவாக இருக்கும் போது, கப்பல் ஒரு மணித்தியாலத்திற்கு 1 முதல் 3 கடல் மைல் வேகம் (Knots) வரை மெதுவாக நகரும். 1 கடல் மைல் வேகம் என்பது ஒரு மணித்தியாலத்திற்கு சுமார் 1.8 கிலோமீட்டர் தூரமாகும்.
காற்றின் திசைக்கு ஏற்ப பாய்மரங்களைச் சரியாகத் திருப்பி, அதிகபட்சக் காற்றைப் பிடிப்பதன் மூலமே கப்பலைச் செலுத்த முடியும் என அதிகாரிகள் விளக்கினர். ஐ.என்.எஸ் தரங்கினியில் பொதுவாக 30 நிரந்தரப் பணியாளர்கள் பணியாற்றுவதுடன், பயிற்சியாளர்களையும் சேர்த்து மொத்தம் 61 பேர் வரை பயணிக்க முடியும். தற்காப்பு நோக்கத்திற்காக சிறிய ரக இயந்திரத் துப்பாக்கிகள் (Small arms – 5.56 mm) போன்ற அடிப்படை ஆயுதத் தளவாடங்களும் கப்பலில் வைக்கப்பட்டுள்ளன.
பாய்மரங்களை இயக்குவது மட்டுமன்றி, ஒரு மாலுமிக்குத் தேவையான அடிப்படைப் பண்புகள் மற்றும் கடலில் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்கும் திறன்களையும் இலங்கை கடற்படையினருக்கு இக்கப்பல் கற்றுக் கொடுத்துள்ளது.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










