மதகு திரை விமர்சனம் – அந்தோனி

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அந்தோனி
ஓசை பிலிம்ஸ் சார்பில் கலைவளரி சகா. ரமணதாஸ் மற்றும் சுகந்தினி ஆகியோரின் தயாரிப்பிலும், சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகியோரின் இயக்கத்திலும், கயல் வின்சென்ட், டி.ஜே. பானு, சுதர்சன், சௌமி, மற்றும் பலரின் நடிப்பிலும், இசைஞானி இளையராஜாவின் இசையிலும், ரிஷி செல்வத்தின் ஒளிப்பதிவிலும், சுரேஷ் பிரசாத்தின் படத்தொகுப்பிலும் 13-03-2026 அன்று முதல் உலகெங்கும் திரையிடப்பட்ட ஈழத்துத் தமிழ் திரைப்படம் அந்தோனி.

அறிமுகம்
இலங்கையின் வடபகுதி மீனவ சமுதாயத்தின் வாழ்வியலோடு அமைந்த கதைக்களத்தில் அழகிய காதலையும், அந்தோனி என்பவன் யார், அழகிய அவனது குடும்பத்தில் எதிர்பாராமல் ஏற்படும் சிக்கல் – அதன் விளைவு என்பவற்றையும் கொண்டு படைக்கப்;பட்ட ஓர் கடலோரக் கவிதையே அந்தோனி திரைப்படமாகும்.
ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களின் கண்களைக் – கடலும், காதுகளை – இசையும் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அது படத்தின் ஒவ்வொரு விநாடியையும் தவறாமல் பார்க்கவேண்டும் எனும் ஆவலையும் தூண்டுகிறது. இதுவே அந்தோனியின் முதல் வெற்றி!

அந்தோனி எனும் மீனவன், அவன் சார்ந்த சமூகத்தின் ஆண்கள் எல்லாம் ஆழ் கடலில் வலைவீசிக் கரைதிரும்பும் போது, இவன் மட்டும் அந்தப் பெரும் கடலைத் தவிர்த்து களப்புப் பகுதியில் தூண்டிலில் மீன்பிடிக்கிறான். அவன் மாலையில் வீடு திரும்பும் போது கரையில் விளக்குடன் காத்திருக்கும் மனைவி – தூங்குவது போல் பாசாங்கு செய்து கண்ணாமூச்சி ஆடும் செல்ல மகள் எனத் தொடங்கி பின்னர் அந்த மீனவக் கிராமம், சம்மாட்டி, இளைஞர் அணி, சந்தை, தேவாலயம், அதைச்சுற்றி நகரும் அஷோக்கின் காதலும், அந்தோனியுடனான முறைப்பும் என சிறிது சிறிதாக வேகமெடுக்கும் படத்தில் இடைவேளைக்குப் பின்னர் முன்பாதியில் எழும் பல கேள்விகளுக்கான பதில்களுடன் அந்தோனி எடுக்கும் ஓர் முடிவு என்பதைக் கூறுவதாக திரைக்கதை அமைந்தள்ளது.

திரைப்படத்தில் அனைவரின் கதாபாத்திரங்களையும் அழகாக செதுக்கி அளவான நடிப்பை வாங்கிய இயக்குநர்கள் இருவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். அதேபோல் இப்படத்தில் குறிப்பிடத்தக்க மற்றுமொரு அம்சம் – வசனங்கள். மிகவும் எளிமையாக ஆனால் அர்த்தம் நிறைந்ததாக குறுகிய வசனங்கள் இரசிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்றன. உதாரணமாக அந்தோனி, தன் மகளைத் தன் வள்ளத்தில் கடலுக்கு அழைத்துச் செல்கின்றான். அங்கு அம்மாவையும் அழைத்து வந்திருக்கலாம் என மகள் கூறும் போது… ‘அவ வரமாட்டா, உங்கட அம்மாவுக்கும், எண்ட அம்மாவுக்கும் ஒரு கொடுக்கல் வாங்கல் இருக்கு‘ என அந்தோனி சொல்லும்போது அதனை நாம் சாதாரணமாகக் கடந்துவிடுவோம். ஆனால் பின்பாதியில் அந்தோனியின் அம்மா யார், அவர் கொடுத்தது என்ன என்பதையும், க்ளைமேக்ஸில் அவர் வாங்கியது என்ன என்பதையும் காணும் போது அந்த சாதாரண வசனம் மீண்டும் வந்து எமது மனங்களை ஆக்கிரமிக்கும். இது போல பல வசனங்கள் – பல இடங்களில்.

பார்வையாளர்களைக் கவனிக்க வைத்தவை:
• காட்சிக்குக் காட்சி கட்டிப்போடும் பின்னணி இசை.
• பார்வையாளர்களையே கடலுக்குள் இறக்கிவிடுவது போன்ற ஓளிப்பதிவு.
• மிகைப்படுத்தப்படாத – இயல்பான நடிப்பு.
• கதை நகரும் கிராமத்தின் வட்டார மொழிநடையில் அமைந்த வசனங்கள்.
• ஆர்ப்பாட்டங்களோ, அதிரடிக் காட்சிகளோ இல்லாத அமைதியான கதை.

படக்குழுவினர் கவனிக்கத் தவறியவை:
• மெதுவாக நகரும் முன்பாதி.
• அந்தக் கிராமத்திற்கு இளமைக்கால அந்தோனியின் பங்களிப்பை சற்று அதிகமாகக் காட்டியிருக்கலாம்.
• திரைப்படமாக இருந்தாலும், அந்தோணியும், மனைவியும் இறுதியில் எடுக்கும் முடிவு சமூகப் பொறுப்பிலிருந்து சற்று விலகிச் செல்வது.

அந்தோணி தனது தூண்டிலினால் மீன்களை மட்டுமல்ல – பெருமளவு சினிமா இரசிகர்களையும்; பிடிக்கிறான்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…

👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects