நவீனமயப்படுத்தப்பட்ட கொழும்பு- புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் இன்றைய தினம் (08.04.2026) திறக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் திறந்து பொது மக்களின் பாவனைக்காக கையளிக்கவுள்ளதாக கிளீன் ஸ்ரீ லங்கா செயலகத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கபில சேனரத் தெரிவித்தார்.
இந்த பேருந்து நிலையம் 585 மில்லியன் ரூபா செலவில் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.
மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் விமானப்படையினர் இதில், முக்கிய பங்காற்றினர் . இதேபோன்று பல நிறுவனங்களும் இப்புனரமைப்பு பணிகளுக்குப் பங்களித்துள்ளன.
கிளீன் ஸ்ரீ லங்கா செயலகத்தின் மேற்பார்வையின் கீழ், இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன . மிகவும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டு, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இந்த பஸ் நிலையத்தில் பயணிகள் தமது கடமைகளை வசதியாக நிறைவேற்ற முடியும். சித்திரைப் புத்தாண்டுக்காக சொந்த கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்கு இங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தினமும் இந்த நிலையத்திலிருந்து சுமார் 1500 பேருந்து சேவைகள் இடம்பெறுகின்றன.
இங்கு பராமரிப்புப் பணிகளுக்காக இலங்கை போக்குவரத்து சபையின் பயிற்சி பெற்ற அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளின் வசதிக்காக, ஒவ்வொரு பேருந்தின் புறப்படும் நேரம் மற்றும் சேருமிடத்தை அடையும் நேரம் என்பவற்றின் விரிவான தகவல்கள் தகவல் மையத்தால் வழங்கப்படவுள்ளன.
இவை அகன்ற டிஜிட்டல் திரைகளில் காட்சிப்படுத்தப்படும். மேலும், புறக்கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து புறப்படும் புகையிரதங்கள் , புகையிரதம் சேருமிடங்கள் மற்றும் விமான சேவைகள் குறித்த விரிவான தகவல்களும் டிஜிட்டல் திரைகளில் காண்பிக்கப்பட உள்ளன.
பயணிகள் தங்கள் பயணங்களை மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளுடனும் இந்த பேருந்து நிலையம் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










